திருகோணமலை, பாலையூற்று பகுதியில் இரு பெண்களை வெள்ளை வேன் ஒன்றில் கடத்திச் சென்று, திருகோணமலை கடற்படை முகாமின் நிலத்தடி சிறையில் அடைத்து, சித்திரவதை செய்து கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு மே மாதத்தில் மேரி டெல்ஷியா மற்றும் சசிகுமார் தேன்மொழி ஆகிய இரு பெண்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினர் இம்மூன்று சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.
மாத்தளை, பூஸா மற்றும் பதுளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 47 மற்றும் 53 வயதுடைய ஓய்வுபெற்ற தலைமைச் சிறு உத்தியோகத்தர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.







