இவ்வருட தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு முற்பணமாக 30,000 ரூபாவை வழங்க வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்கு (Employers’ Federation of Ceylon – EFC) அவர் எழுத்துமூலம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
கடந்த வருடம் தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 25,000 ரூபா வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இவ்வருடம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டு, முற்பணத் தொகையை 30,000 ரூபாவாக அதிகரித்து வழங்க வேண்டும் என செந்தில் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தோட்டத் தொழிலாளர்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் இந்தத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.








