சுமார் 46,460,000 ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ (Kush) போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்தி வந்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற மியான்மர் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (21) அதிகாலை குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 22 வயதுடைய இவர், மியான்மரில் தொழிலாளியாகப் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் இன்று அதிகாலை 1.45 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து, தாய் எயார்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான TG-307 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, அவர் கொண்டு வந்த பயணப் பைகளில் ஆடைகள், இனிப்புப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 646 கிராம் எடையுடைய குஷ் போதைப்பொருள் மூன்று பொதிகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, சந்தேகநபரையும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையையும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சந்தேகநபரைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்காகக் கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் தலைமையகத்தில் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.








