நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டிற்கு அருகில் காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, படிப்படியாக மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் நாள் முழுவதும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (22) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற எதிர்வரும் வானிலை நிலைமைகள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையைச் சூழ இடை அயன மண்டல ஒன்றிணைவு வலயம் (ITCZ) காணப்படுவதால், நாட்டின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகியுள்ளதுடன், நாளையும் (23) நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மழையுடனான வானிலை நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இடை அயன மண்டல ஒன்றிணைவு வலயத்தின் தாக்கம் காரணமாக, ஒக்டோபர் 23ஆம் திகதியளவில் அந்தமான் தீவுகளைச் சூழ குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒன்று உருவாகக்கூடும் எனவும், அது மேலும் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த வானிலை அமைப்பினால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏற்படாது என எதிர்பார்க்கப்பட்டாலும், காற்றோட்டத்தின் தாக்கம் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை ஒக்டோபர் 27ஆம் திகதி வரை தொடரக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் காணப்படும் குறைந்த அழுத்த நிலைமையும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், எதிர்வரும் நாட்களில் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்கள், குறிப்பாக பலநாள் மீன்பிடிப் படகுகளில் பயணிப்பவர்கள், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து அவதானித்து, அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.








