ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 46 வயதுடைய பெண் ஒருவர் கிராண்ட்பாஸ் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 1 கிலோகிராம் 45 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 1 கிலோகிராம் 86 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், போதைப்பொருட்களை எடைபோடப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மின்னணு தராசு, போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கைபேசி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட பெண் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







