திருகோணமலையில் தந்தையைப் பொல்லால் தாக்கிக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 35 வயதுடைய மகனுக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று (22) தீர்ப்பளித்துள்ளது.
கைலாசப்பிள்ளை வினோதரன் என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம். அப்துல்லா இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதி, தோப்பூர், பாலத்தடிச்சேனை பகுதியில் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் வினோதரன், தனது 59 வயதுடைய தந்தையான முருகுப்பிள்ளை கைலாசப்பிள்ளையைப் பொல்லால் தாக்கிக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், 2024ஆம் ஆண்டு குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
வழக்கு விசாரணைகளின் நிறைவில், குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தண்டனை தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.
இதன்போது, தண்டனைச் சட்டக்கோவையின் 296ஆம் பிரிவின் கீழ் கைலாசப்பிள்ளை வினோதரனுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
அரச தரப்பு சார்பில் அரச சட்டத்தரணிகளான சிகான் முஸ்தாபா மற்றும் செசான் மஹபூ ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.







