ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் சமூக வலைத்தளத்தில் முஸ்லிம் சமூகத்தைப் புண்படுத்தும் வகையில் வெளியிட்ட கருத்துக்களை வன்மையாகக் கண்டிப்பதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் வருண சம்பத் வண்டார, தனது முகநூல் பதிவில் ஏறாவூர் பள்ளிவாசல்களில் தொழுகைக்காக விடுக்கப்படும் பாங்கு மற்றும் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் தொடர்பில் மோசமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி, முஸ்லிம் சமூகத்தினரைப் புண்படுத்தும் வகையிலான கருத்துக்களைப் பொதுவெளியில் வெளியிட்டுள்ளார்.
இக்கருத்துக்கள் ஏறாவூர் பிரதேசத்தில் மட்டுமன்றி, நாடளாவிய ரீதியில் வாழும் முஸ்லிம் சமூகத்தினர் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
அண்மையில் அக்குரணையைச் சேர்ந்த டாக்டர் துஷார எச். குலதுங்கேவும் விபத்தில் உயிரிழந்த முஸ்லிம்கள் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தினரைப் புண்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இவ்வாறான கருத்துக்கள் தொடர்ச்சியாக வெளியிடப்படுவது நாட்டில் நிலவும் இன நல்லுறவுக்கு ஆரோக்கியமானதல்ல.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஏறாவூர் பிரதேசத்தின் வைத்தியசாலைப் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றும் ஒருவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது, அந்த வைத்தியசாலையை நம்பி சிகிச்சை பெறும் மக்களின் மனநிலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
மேலும், இவ்வாறான கருத்துக்கள் இலங்கை மருத்துவ சபையின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணானவையாகவும், நாட்டில் இன முரண்பாடுகளைத் தூண்டும் வகையிலும் அமைந்துள்ளன. அத்துடன், இலங்கையின் சட்டதிட்டங்களுக்கும் முரணான நடவடிக்கையாகக் கருதப்படக்கூடிய இவ்விடயம் தொடர்பில் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும்.
குறிப்பாக, சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆகியோர் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி, உரிய ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறான கருத்துக்களை வெளியிட்ட ஒருவர் தொடர்ந்து அப்பிரதேசத்தில் கடமையாற்றுவதை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. எனவே, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் வருண சம்பத் வண்டாரவுக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இவ்விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாகவும் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.








