தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 16 வயதுடைய தனது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 39 வயதுடைய தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி பல வாரங்களாகப் பாடசாலைக்கு வருகை தராததை அவதானித்த பாடசாலை அதிபர், இது தொடர்பில் சந்தேகமடைந்து தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, சிறுமி, அவரது தந்தை மற்றும் தாயார் ஆகியோரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணையின்போது, தனது தந்தையால் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகச் சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சந்தேகநபரான தந்தையைக் கைது செய்த பொலிஸார், அவரை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதன்போது, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைகளுக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








