நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு விசேட இழப்பீடுகள் மற்றும் சலுகைகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, உயிரிழந்த ஒவ்வொரு சிறைச்சாலை அதிகாரிக்கும் தலா 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. முழுமையான இயலாமைக்கு உள்ளான அதிகாரிகளுக்கும் 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
அதேவேளை, வருமானம் ஈட்டும் திறனை 100 சதவீதம் இழந்த பகுதியளவிலான இயலாமைக்கு உள்ளான அதிகாரிகளுக்கு 40 இலட்சம் ரூபாயும், தற்காலிக பகுதியளவிலான இயலாமைக்கு உள்ளான அதிகாரிகளுக்கு 30 இலட்சம் ரூபாயும் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு சமர்ப்பித்த அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பீடுகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பொது நிர்வாகச் சுற்றறிக்கையின் கீழ் வழங்கப்படும் இழப்பீட்டுக்கு மேலதிகமாக வழங்கப்படவுள்ளன.
மேலும், சிறைச்சாலை தந்திரோபாயப் படைக்கு சட்டபூர்வ அந்தஸ்து வழங்கும் வகையில் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்துடன், குறித்த படைக்கு தகுதியான அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்தல், அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகளை வழங்குதல், நவீன உபகரணங்களைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் பொருத்தமான இடத்தில் தலைமையகத்தை அமைத்தல் ஆகிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.







