இலங்கை நாட்டில் சிறுபான்மை இனங்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டாலும் இறுதியில் உயிருடன் இருப்பது நீதித்துறைத்தான் என்று மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் வேளையில் அதுவும் மண்ணோடு புதைந்து பல காலம் ஆகிவிட்டது என்று தெரிவித்திருக்கிறது முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் கடிதம்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புத்தரை தேடி அகழ்வு பணி மேற்கொண்டிருந்த தொல்லியல் திணைக்களத்துக்கு ஆதி சிவலிங்கமே கிடைத்திருந்தது. இது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கும்பகோணம் கூந்தூர் முருகன் லிங்கத்துடன் ஒத்ததாக காணப்பட்டாலும் இந்த தொல்பொருள் சிதைவு அநுராதபுர காலத்து பாரிய தூபியின் முடிப் பகுதி என தொல்பொருள் திணைக்கள இராஜாங்க அமைச்சர் விதுர விக்கரமநாயக்க தனது முகநூலில் கருத்தொன்றை பதிவிட்டிருந்தார்.
இது அத்தோடு நிற்கவில்லை அரச, அரசியல் பின்புலத்தில், இராணுவத்தினரின் உதவியுடன் அவசர அவசரமாக குறுந்தூர்மலையில் கல்கமுவே சாந்தபோதி தேரர் தலைமையில் பண்டையகால தோற்றத்தில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டது. குருந்தூர் மலையை சுற்றியுள்ள விவசாய காணிகளை கூட தொல்பொருள் திணைக்களம் எல்லை கல் நாட்டி சுவீகரித்தது மட்டுமல்லாமல், குருந்தூர் மலையில் இருக்கும் ஆதிசிவன் கோவில் லிங்கமும் இனவாத காடையர்களால் உடைக்கப்பட்டது.
இது ஒரு புறமிருக்க தமிழர் தாயகமான முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அத்துமீறி விகாரை கட்டுப்படுவதாக சுமார் 4 வருடங்களுக்கு முன்பு ஆதி சிவன் கோயில் பக்த அடியார்களால் வழக்கு ஒன்று தொடரப்பட்டு பல வருடங்களாக இழுபறி நிலையில் சென்று கொண்டிருந்த வழக்குக்கு நியாயமான ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தார் முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா. அதாவது அந்த தீர்ப்பில்,
“தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை ஆதி சிவன் அய்யனார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறும் குறித்த கட்டுமானங்களை அகற்றி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும், குறித்த பகுதியில் ஆதி சிவன் அய்யனார் ஆலயத்தினர் தங்களுடைய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எந்த விதத்திலும் தடை விதிக்க கூடாது எனவும் இந்த இடத்தில் அமைதியின்மை ஏற்படாத வகையில் காவல்துறையினர் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியிருந்தார்.
இந்த தீர்ப்பினை தொடர்ந்து இவருக்கு எதிராக தென்னிலங்கை அரசியல்வாதிகளால் குறிப்பாக சரத் வீரசேகரவினால் பல்வேறு இனவாத கருத்துக்கள் பாராளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் மிக பாரதூரமான முறையில் பரப்பட்டன. ஒரு கட்டத்தில் சரத் வீரசேகர அவரது உரை ஒன்றில், வடகிழக்கில் பணிபுரிகின்ற தமிழ் நீதிபதிகள் இந்நாடு சிங்கள பௌத்த நாடு என்பதனை கருத்திற்கொண்டு தங்களது தீர்ப்பினை வழங்க வேண்டும் என தனது கருத்தில் கூறியிருந்தார். இவ்வாறான பின்புலத்தில் தொடர்ச்சியாக நீதிபதிக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகளாலும் அச்சுறுத்தல்களாலும் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்ததோடு உயிர் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடு செல்லுவதாக ஊடகங்களுக்கும் தெரிவித்திருந்தார். இந்த விடயத்தினூடாக உண்மையில் கூற முற்படும் கருத்து என்னவெனில், தமிழர்களை அழிக்க பெரும்பான்மை இனவாத அரசியல் கையில் எடுத்திருக்கும் வியூகம் தமிழர் நிலங்களை கைப்பற்றி பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களை அடக்கிவிடலாம் அல்லது விரட்டி விடலாம் என்பதை உறுதி படக்கூறுகின்றது.
ஒரு தமிழ் நீதிபதிக்கே இந்த நிலை என்றால் நாட்டில் வாழும் சாதாரண தமிழ் மக்களின் நிலை என்னவென்பதை சொல்லாமலேயே புரிந்து கொள்ளலாம். தமிழ் மக்களை ஒழிக்க பெரும்பான்மை இனவாத அரசு எத்தனிக்கிறது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
இதனூடாக இலங்கை அரசின் கோரமான இனவாத முகம் வெளிப்பட்டு நிற்பதோடு அதை மறைப்பதற்காக பல்வேறுவிதமான விஷம பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. இதில் ஒரு பகுதியாக, நீதிபதி சரவணராஜா வெளிநாடு ஒன்றில் புகலிடம் பெறுவதற்காகவே இவ்வாறானதொரு நாடகத்தை நடத்துகிறார் என்ற ரீதியிலும் புனைகதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இவ்வாறு கூறுபவர்களுக்கு நீதிபதி சரவணராஜா வெளிநாடொன்றில் புகலிட கோரிக்கையை பெறவேண்டும் என்றால் அவருக்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன என்பதையும் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை கொண்டுதான் அவர் குடியேறவேண்டும் என்ற நிலைமை இல்லை என்பதையும் சொல்பவர்கள் எந்தளவுக்கு புரிந்திருக்கின்றார்கள் என்பது விளக்காமலேயே இருக்கிறது.
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும் பெரும்பான்மை பாராளுமன்ற உறும்பினர்கள் குருந்தூர் மலைக்காக பாடுபடுகிறார்கள், நீதிமன்ற கட்டளையை மாற்றியமைக்க அழுத்தம் பிரயோகிக்கின்றார்கள் என்றால் அது அவர்கள் சிங்கள பௌத்தத்திற்காக ஒன்று சேர்ந்த நிலைமையை காட்டி நிற்கின்றது. ஆனால் சட்டமா அதிபர் திரு.சஞ்சய் ராஜரத்தினம் தனது அலுவலகத்திற்கு நீதிபதியை அழைத்து வழக்கின் தீர்ப்பை மாற்றியமைக்கும் படி அழுத்தங்கள் பிரயோகித்தார் என்று நீதிபதி சரவணராஜாவினால் கூறப்பட்டுள்ள கருத்து மிக பாரதூரமான விடயமாக கொள்ளப்படவேண்டியுள்ளது. சட்டமா அதிபருக்கு ஒரு நீதிபதியை அழைத்து அறிவுறுத்தல் வழங்குகின்ற அதிகாரம் இலங்கை நீதி துறைக்கு கிடையாது என்பதையும் மீறி இச்சம்பவம் நடந்திருப்பதானது எந்தளவிற்கு அரசின் அதிகாரங்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன என்பதையே காட்டி நிற்கின்றது.
இதில் தெளிவாக தெரியும் ஒரு விடயம் என்னவெனில், நீதித்துறைக்கு சுதந்திரம் இல்லை என்பதுடன் இலங்கையில் அதிகார வர்க்கத்திற்காகவும், அதிகார மேலாதிக்கத்திற்காகவும் நீதித்துறை எவ்வாறு வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கக் கூடியது என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகியிருக்கிறது.
சட்டமா அதிபரான திரு.சஞ்சய் ராஜரத்தினம் அரச வழக்கு சட்டவாதியாக இருந்த பொழுது இறுதியுத்தத்தின் போது பணியாற்றிய வைத்தியர் முரளி வல்லிபுரநாதனுக்கு எதிராக அவர்மீது பொய்க்குற்றங்கள் சாட்டி வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் இவ்வாறு கூறுகிறார்.
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களை அழைத்து குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றியமைக்கும்படி அழுத்தம் பிரயோகித்தது உட்பட பல காரணங்களினால் பதவியை ராஜினாமா செய்து உயிர் பாதுகாப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சட்டமாதிபராக வருவதற்கு முன் திரு.சஞ்சய் ராஜரட்ணம் எனக்கு எதிராக உச்ச நீதிமன்றில் ஆஜராகி சிரேஷ்ட அரசாங்க ஊழியராக இருந்து கொண்டு நான் வன்னியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்களுக்கு சார்பாக சக வைத்தியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியது நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக வாதாடியதால் 13 மாதங்கள் வேலையும் சம்பளமும் இன்றி அவஸ்தைப்பட்டேன். பின்னர் உச்சநீதிமன்றம் இவருடைய கருத்துக்களை புறந்தள்ளி மீண்டும் என்னை 13 மாத சம்பளத்துடன் வேலைக்கு அமர்த்தியது. இவர் சட்டமாஅதிபராக பதவி ஏற்றதும் உதட்டளவில் தமிழ் பேசும் சில தமிழ் அமைப்புகள் தமிழர் ஒருவர் சட்டமாதிபராக பதவி ஏற்றார் என்று கொண்டாடினார்கள். தற்போது இலங்கையில் தமிழர்கள் பதவி உயர்வு பெற்று உயர் நிலைக்கு வந்தாலும் அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதையே நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு ஏற்பட்ட நிலை வெளிக்காட்டி நிற்கின்றது என்று அவர் கருத்தை பதிவிட்டிருந்தார்.
இவ்வாறான நிலைமைகள் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் எந்தளவிற்கு நீதித்துறை ஆதரவாக இருக்கும் என்பதில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு எக்காலத்திலும் தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தின் நீதித்துறையினால் தங்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்று நம்புவது எவ்வளவு பெரிய முட்டாள் தனமான சிந்தனை என்பதையே காட்டி நிற்கின்றது. அரசாங்கத்திற்காக வக்காலத்து வாங்கும் தமிழ் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியற்கட்சி பிரமுகர்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு இதை வைத்து பிழைப்பு நடத்த போகிறார்கள் என்பதற்கு காலமும் வரலாறும் நிச்சயம் பதில் சொல்லியே தீரும்.