இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கென்று புதிய ஒழுங்குபடுத்தும் சபையொன்றை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
விலைத்திருத்தம் தொடர்பில் நேற்று (05) நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே இவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
மின்சாரம், எரிபொருள் ஆகியவற்றில் தற்போது விலைத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் இவை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முந்தைய காலங்களில் இந்த விலை நிர்ணயம் மற்றும் விநியோகம் என்பன இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்டது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது போட்டி நிறுவனங்களும் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் போட்டி நிலை அதிகரித்திருக்கிறது இதனால் இவை அனைத்தையும் நிர்வகிப்பதற்கு ஒரு தனி ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்பட வேண்டியது கட்டாயமானது என்றும் அவர் தெரிவித்தார்.
மின்சாரத் துறையை ஒழுங்குபடுத்துவதற்கு, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது, அதே போன்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினை ஒழுங்கமைப்பதற்கும் புதிய ஒழுங்குமுறை அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் இதன் போது வலியுறுத்தியிருந்தார்.