இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் தலைமைப் பதவி இலங்கைக்கு – இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் 23ஆவது அமைச்சர் மட்ட கூட்டம் ஒக்டோபர் 11 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்கவுள்ள அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டம் அடுத்த வாரம் கொழும்பில் நடைபெறவுள்ளது.
2023 ஒக்டோபர் 11ஆந் திகதி கொழும்பில் இலங்கை நடாத்தவுள்ள 23ஆவது இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்திற்காக இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் அதன் உறுப்பு நாடுகளின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளனர்.
அவுஸ்திரேலிய உதவி வெளியுறவு அமைச்சர் டிம் வொட்ஸ் (Tim Watts), பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஏ.கே. அப்துல் மொமன் (Dr A. K. Abdul Momen), இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் (Dr. Subrahmanyam Jaishankar), இந்தோனேசியாவின் அரசியல் சட்டம் மற்றும் அரசியல் விவகார அமைச்சரின் ஆலோசகர் ஆடம் முலவர்மன் டுகுவோ(Adam Mulawarman Tugio) , ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் (Hossein Amir-Abdollahian) , மலேசியாவின் வெளியுறவு அமைச்சர் டத்தோ. செரி திராஜா சம்ப்ரி அப்துல் காதிர் (Dato Seri Diraja Zambry Abdul Kadir), மொரீஷியஸின் வெளியுறவு, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மனீஷ் கோபின் (Maneesh Gobin), ஓமன் அரசியல் விவகாரங்களுக்கான உப செயலாளர் ஷேக் கலபா பின் அலி பின் இசா அல்-ஹார்த்தி(Sheikh Khalifa bin Ali bin lssa Al-Harthy), சிங்கப்பூர் பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி மற்றும் வெளிவிவகார இரண்டாவது அமைச்சருமான கலாநிதி முகமது மாலிகி பின் ஒஸ்மான்(Dr Mohamed Maliki Bin Osman), தென்னாப்பிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் கலாநிதி(திருமதி) நலேன்டி பாண்டோர்(Dr (Mrs) Naledi Pandor), தாய்லாந்தின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் சிஹாசக் புவாங்கெட்கியோ(Sihasak Phuangketkeow), ஐக்கிய அரபு இராஜ்ஜிய பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்கள் உதவி அமைச்சர் சயீத் முபாரக் அல் ஹஜெரி(Sayeed Mubarak Al Hajeri), யெமன் வெளிவிவகார பிரதம அமைச்சர் அவ்சன் அப்துல்லா அஹமட் அல்-ஆவுத்(Awsan Abdullah Ahmed Al-aud) ஆகியோர் கொழும்பில் நடைபெறும் அமைச்சர்கள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஜப்பான் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மசாஹிரோ கொமுரா (Masahiro Komura), கொரியா வெளியுறவு அமைச்சின் அரசியல் விவகாரங்கள் துணை அமைச்சர் சுங் பியுங்-வோன்(Chung Byung-won), ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசிபிக் அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெலியன்(Anne Marie Trevelyan), ஆகியோரும் இந்த கூட்டத்தில் இணையவுள்ளனர்.
அமைச்சர்கள் குழு என்பது இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் தீர்மானம் மேற்கொள்ளும் மிக உயர்ந்த அமைப்பாகும். தற்போதைய தலைவரான பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் தலைமைப் பதவியை வழங்கும்போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சபைக்கு தலைமை தாங்குவார்.
இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக, வெளியுறவு செயலாளர் அருணி விஜேவர்தன தலைமையில் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவின் 25ஆவது கூட்டம் (ஒக்டோபர் 9-10) நடைபெறும்.
1997 இல் நிறுவப்பட்ட இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கம், இந்து சமுத்திரத்தின் எல்லையிலுள்ள அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். அதன் உறுப்பினர்கள் ஆபிரிக்கா, மேற்கு ஆசியா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா வரை பரவியுள்ளனர்.இன்று, இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 23 உறுப்பு நாடுகள் மற்றும் 11 உரையாடல் கூட்டாளர்கள் என்ற அளவில் விரிவடைந்துள்ளது. 23ஆவது அமைச்சர்கள் கூட்டத்தில் 2023 முதல் 2025 வரையான காலப்பகுதிக்கான இந்து சமுத்திர எல்லை நாடுகள் சங்கத்தின் தலைமைப் பதவியை இலங்கை ஏற்கும்.
வர்த்தகம் மற்றும் முதலீடு, கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு, மீன்பிடி முகாமைத்துவம், இடர் முகாமைத்துவம் மற்றும் பசுமைப் பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில், சங்கத்தால் அடையாளம் காணப்பட்ட ஆறு முன்னுரிமைப் பகுதிகளில் ஒத்துழைப்பதற்கான வழிகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசிக்கவுள்ளனர்.
இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி சல்மான் அல் ஃபரிசி மற்றும் மொரிஷியஸில் உள்ள இந்து சமுத்திர எல்லை சங்க செயலகத்தின் பணிப்பாளர்களும் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
எமது நாட்டுக்கு விஜயம் செய்யும் அமைச்சர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதுடன், இலங்கையில் தங்கியிருக்கும் போது, இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஏனைய அமைச்சர்களுடனும் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடுவர்.