வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள சிவலிங்கம் சிதைக்கப்பட்டு, அப்பகுதியை பௌத்த மயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையின் தொல்பொருள் திணைக்களம் அதன்
வேலையை மீண்டும் மேற்கொண்டிருக்கின்றது. குருந்தூர் மலையில் வெற்றிகரமாக பௌத்த விகாரையை நிறுவியிருக்கும், தொல்பொருள் திணைக்களம் தற்போது, இந்துக்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிவலிங்க வழிபாட்டு பகுதியையும் இலக்கு வைத்திருக்கின்றது. இலங்கையில் எதுவும் நடக்கலாம் – எவரும் ஆட்சியில் அமரலாம் – கீழிறங்கலாம் ஆனால் தொல்பொருள் திணைக்களம் மட்டும் அப்படியே, அப்பழுக்கற்ற பௌத்த சேவையை முன்னெடுத்து வருகின்றது. அது எப்படி? தொல்பொருள் திணைக்களம் உண்மையிலேயே அரசாங்க கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றதா அல்லது, பௌத்த மகா சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றதா? எவ்வாறு தொல்பொருள் திணைக்களம் அரசாங்க உத்தரவுகளை மீறியும் செயற்பட்டுவருகின்றது? இலங்கை பஞ்ச ஈஸ்வரங்களால் நிர்வகிக்கப்பட்ட ஒரு நாடென்று, இலங்கையின் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்களே குறிப்பிட்டிருக்கின்றார்கள். இலங்கைக்கு ஏதும் ஆபத்து நேர்ந்துவிடக் கூடாதென்னும் நோக்கில், இலங்கையை காக்கும் காவல் தெய்வங்களாகவே பஞ்ச ஈஸ்வரங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. இலங்கையின் கரையோரங்களை அண்டிய பகுதிகளில் இந்த ஆலயங்கள் நிறுவப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஆனால், இப்போது அந்த காவல் தெய்வங்களை பாது
காக்க தமிழ் இந்துக்கள் பாடுபட வேண்டியிருக்கின்றது. கடவுள் மக்களை பாதுகாப்பார் என்னும் நம்பிக்கை சிதைந்து, கடவுள்களை மக்கள் காப்பாற்ற வேண்டியிருக்கின்றது.
புத்தரின் பலத்திற்கு முன்னால் சிவன் அனைத்து இடங்களிலும் தோற்றுக்கொண்டேயிருக்கின்றார். இலங்கையின் சிவனை காப்பாற்ற சிவசேனையாலும் முடியவில்லை, ஆர்.எஸ்.எஸ் ஆலும் முடியவில்லை. இந்திய பிரதமா; நரேந்திர மோடி, இலங்கைக்கு விஜயம் செய்தபோது, பௌத்த பிக்குகளின் காலில் விழுந்து வணங்கியிருந்தார். பௌத்தர்களும் இந்துக்கள்தான் என்னுமடிப்படையில்தான் மோடி, அவ்வாறு
செய்திருந்தார். ஆனால் இலங்கைத் தீவின் பௌத்தம், இந்துக்களை சுயாதீனமாக இயங்க அனுமதிக்கப் போவதில்லையென்றே சூளுரைக்கின்றது.
அதன் வெளிப்பாடாகவே சிவலிங்க உறைவிடங்களை பௌத்த மயப்படுத்தும் திட்டத்தை வேகப்படுத்தியிருக்கின்றது. இந்துக்களின் குரலை செவிமடுக்க, அவர்களுக்கு அபயமளிக்க எவருமில்லை. சிவசேனை இருக்கின்றது ஆனால், சிவலிங்கம் பந்தாடப்படுகின்றது. வெடுக்குநாறி மலை சிவலிங்கம் சிதைக்கப்பட்டிருப்பதானது, அண்மையில் ஆனையிறவில் நடராஜர்சிலை வைக்கப்பட்டதற்கான எதிரொலியா? அவ்வாறாயின், மோடியின் இந்துத்துவா அணுகுமுறை இலங்கைத் தீவில் தோல்விடைந்து செல்கின்றதா?
இலங்கையில் இந்துத் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்திருப்பதற்கான அடையாளங்கள்தான் சிவலிங்க வழிபாட்டுத் தலங்களாகும். ஆனால் அது தொடர்ந்தும் சிதைக்கப்படுகின்றது. இதற்கு அண்ணா மலையின் பதில் என்ன? ஒரு வகையில் அண்ணாமலை போன்றவர்கள் அண்மைக்காலமாக, வடக்கு மாகாணத்துடன் நெருங்கும் முயற்சிகளை மேற்கொண்டதற்கான எதிர் விளைவுகள்தானா இவ்வாறான செயல்பாடுகள்? ஏனெனில் பி.ஜே.பியின் வடக்குடனான நெருக்கத்தை சிங்கள கடும்போக்குவாதிகள் எதிர்த்திருந்தனர். அவர்கள் இதனை ரசிக்கவில்லை. விமல்வீரவன்ச அண்ணாமலையின் வரவை விமர்சித் திருந்ததையும் நாம் இந்த இடத்தில் குறித்துக் கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் தமிழரசு கட்சியின் தலைவர் செல்வநாயகம், தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென்றார் – இப்போது அந்தக் கடவுள்களை காப்பாற்றுவதற்கு வழிதெரியாமல், தமிழர்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். செல்வநாயகம் அடிப்படையில் ஒரு கிறிஸ்தவர். அவர் ஒரு வேளை அவரது கடவுளை கூறியிருந்தாரோ தெரியவில்லை.