மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள முஸ்லிம் பெரிய பள்ளிவாசலுக்கு முன்னால் முறிந்து விழும் அபாயத்திலிருந்த மரம் நேற்றைய தினம் முற்றுமுழுதாக வெட்டப்பட்டது.
குறித்த பள்ளிவாசலுக்கு முன்னால் வீதி சுற்றுவட்டத்திற்கு அருகில் பாரிய மரம் ஒன்று அரிக்கப்பட்டு முறிந்து விழும் அபாயநிலையில் காணப்பட்டமையினால் எதிர்காலத்தில் இதனால் அனர்த்தங்கள் எதுவும் சம்பவிக்க கூடும் என்ற நிலையிலேயே இம்மரம் வெட்டப்பட்டது.
அதாவது பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள மட்/ வின்சன் பெண்கள் தேசிய பாடசாலையில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்விகற்று வருவதாகவும், அரசகாரியாலயங்கள் நீதிமன்றம் போன்ற காரியாலயங்களுக்கு அந்த மரத்தின் கீழ் உள்ள வீதியால் நாளாந்தம் சுமார் 5 ஆயிரம் பேர் பயணம் செய்வதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் குறித்த மரம் விழும் அபாயத்தையடுத்து வீதியால் பயணிக்கும் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அச்சத்தின் மத்தியில் பல்வேறு அசௌகரியங்களுடன் பயணித்து வருவதாகவும், இதனால் குறித்த மரத்தை அகற்றுமாறும் பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.
இதனையடுத்து நேற்றையதினம் (16.10.2023) வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் குறித்த மரத்தினை வெட்டியுள்ளனர் . மேலும் குறித்த மரத்தினை வெட்டுவதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் ஆரம்பத்தில் தனது எதிர்ப்பினை தெரிவித்திருந்தாலும் அனர்த்த நிலைமையினை கருத்திற்கொண்டு அவர்களுடைய ஆதரவினையும் வழங்கிய பின்னர் இம்மரம் வெட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.