தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தை இலங்கையில் திரையிட வேண்டாமென தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் விஜய்க்கு எழுதியதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் கடிதம் போலியானது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று 18.10.2013 யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இது தொடர்பில் கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்
தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜயின் லியோ திரைப்படத்தை ஹர்த்தால் தினமன்று எதிர்வரும் (20) இலங்கையில் திரையிட வேண்டாமென கடிதம் அனுப்பியதாக சமூக வலைத்தளங்களில், தமிழ்க் கட்சிகளின் கையொப்பத்துடன் வெளிவந்திருக்கும் கடிதம் போலியானது.
அவ்வாறு எந்த கடிதத்தையும், கோரிக்கையையும் நாம் யாருக்கும் அனுப்பவில்லை என்று மறுப்பு தெரிவித்ததோடு, வேறு கடிதங்களில் உள்ள கட்சித் தலைவர்களின் கையொப்பங்களை பயன்படுத்தி குறித்த கடிதம் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே ஹர்த்தால் என்றால் வழமையாக திரையரங்குகள் உட்பட அனைத்தும் மூடப்பட்டிருக்கும். நாம் ஒட்டுமொத்தமான வட கிழக்கிற்கும் ஹர்த்தாலுக்கான கோரிக்கையை விடுத்துள்ளதுடன் அதனை திரையரங்கு உரிமையாளர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறோம்.என்றார்.