இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அனர்த்த அபாய குறைப்பு தொடர்பான விஷேட கலந்துரையாடலொன்று பிரதேச செயலக டேபா மண்டத்தில் நடைபெற்றது.
அனர்த்த அபாய குறைப்புத்திட்டத்தினை உள்ளூராட்சி மட்டத்திற்கு கொண்டு செல்வதனூடாக பிரதேச மட்டத்தையும் உள்ளூராட்சி மட்டத்தையும் ஒன்றிணைத்து எதிர்காலத்தில் ஏற்படும் அனர்த்தங்களை குறைக்கும் திட்டத்திற்கான முன்மொழிவு குறித்து இதில் கலந்துரையாடப்பட்டன.
இத்திட்டம் குறித்த கலந்துரையாடலானது இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
முதலாம் கட்டமானது பிரதேச செயலாளர்கள் மட்டத்திலும் இரண்டாம் கட்டமானது உள்ளூராட்சி மட்டத்திலும் நடை பெற திட்டமிடப்பட்டிருந்தது.
அந்த வகையில் இன்று காலை 10.00 மணியளவில் பிரதேச செயலாளர்கள் மட்டத்திலான கலந்துரையாடலிற்கு மட்டக்களப்பு மாவட்டத்தினுடைய பிரதேச செயலக பிரிவுகளிலிருந்து பிரதேச செயலாளர்கள் , உதவி பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டதுடன் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
உதவி அரசாங்க அதிபர், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினுடைய பிரதி பணிப்பாளர்கள் கலந்து கொண்டு திட்டம் தொடர்பிலான பூரண விளக்கங்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.