தமிழ் மக்களுக்கு மிக மோசமாக இந்த பிக்கு கதைக்கும் போது ரணில் விக்ரமசிங்கவினுடைய சப்பாத்தை நக்கி கொண்டு இந்த மாவட்டத்திலேயே இரண்டு ராஜாங்க அமைச்சர்கள் இருப்பது மிகவும் மன வேதனை தரும் ஒரு விடயம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த சாணக்கியன் எம்.பி,
தற்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக நடக்கும் பொய்யான விடயங்களை சித்தரிக்கும் வேலை திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த அடாவடி பிக்கு அம்பிட்டிய சுமணரத்ன தேரர் முன்னெடுத்து வருகிறார்.
கடந்த காலத்திலே கிழக்கு மாகாணத்தை நாசமாக்கிய கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் மற்றும் அவர்களுடைய இனவாத கும்பல் கிழக்கு மாகாணத்தை, அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தையும் அதிலும் குறிப்பாக என்னையும் குறிவைத்து ஒரு சில போலியான பிரச்சாரங்களை தொடர்ச்சியாக செய்து கொண்டு வருகின்றார்கள்.
இதனுடைய நோக்கம் தெற்கிலே எங்களுடைய உரைகளையும் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளும் சிங்கள சமூகம் மத்தியில் என்னை தவறான ஒருவராகவும் சிங்கள மக்களுக்கு எதிரான ஒருவராகவும் காட்டி, அதேசமயம் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சிங்களவர்களை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்கின்ற சிந்தனை உள்ள ஒருவராகவும் என்னை எடுத்து காட்டுவதற்காகவே இந்த முயற்சி இடம்பெறுகிறது.
அத்தோடு நேற்றைய தினம் கூட மயிலத்தமடுவுக்குள்ளே மகாவலி அலுவலகத்தின் பக்கத்தில் இருக்கும் காணியைக் கூட உழவு இயந்திரங்களைக் கொண்டு உழவடிக்கும் வேலைகள் செய்து, விவசாயத்திற்காக நிலத்தை தயார் படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
அதாவது ஜனாதிபதியின் பாராளுமன்ற குழுவியிலே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றவர்கள் ஆக குறைந்தது பாராளுமன்ற குழு கூட்டங்கள் நடைபெறும் போதாவது இந்த விடயங்களை பற்றி அதிலும் விசேடமாக மொட்டு கட்சியில் இருக்கின்ற இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பி இருக்கலாம். ஆனால் இவர்கள் இதை செய்யாதது கவலையான விடயம்.
ஆனால் அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் என்று மிக மோசமாக கதைக்கும் போது ரணில் விக்ரமசிங்கவினுடைய சப்பாத்தை நக்கி கொண்டு இந்த மாவட்டத்திலேயே இரண்டு ராஜாங்க அமைச்சர்கள் இருப்பது மிகவும் மன வேதனை தரும் ஒரு விடயம்-என்றார்.