ஐரோப்பாவில் இருந்து கப்பல்கள் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் ஏற்றுமதி செய்யும் பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதாக சர்வதேச சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் – பாலஸ்தீன போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஐரோப்பாவையும் கிழக்கையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் ஊடாக பயணிக்கும் கப்பல்களை இறக்குமதி செய்வதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் சர்வதேச காப்புறுதி நிறுவனங்கள் விசேட இடர் கட்டணத்தை விதித்துள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
சில காப்புறுதி நிறுவனங்கள் இடர் காப்புறுதி விகிதங்களை வெகுவாக அதிகரித்துள்ளதாக இலங்கையிலுள்ள முக்கிய சர்வதேச வர்த்தக நிறுவனம் ஒன்றின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சூயஸ் கால்வாய் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில், சூயஸ் கால்வாய் ஊடாக செல்லும் கப்பல்களின் கட்டணம் 5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள், எரிவாயு மற்றும் வாகனங்களுக்கு 15 சதவீத கட்டணமும், ஏனைய சரக்கு கப்பல்களுக்கு 5 சதவீத கட்டணமும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, காப்பீட்டு நிறுவனங்கள் இடர் கட்டணங்களை அதிகரித்துள்ளன.
இதற்கிடையில், போர் தீவிரமடையும் பட்சத்தில், சூயஸ் கால்வாய் ஊடான போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டு இஸ்ரேலிய வான்வெளி மூடப்படலாம் என உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்நிலையில், ஆசிய நாடுகளில் இறக்குமதி பொருட்களின் விலை மேலும் உயரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.