வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணம் நாளை (01) அறிவிக்கப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (31) அறிவித்துள்ளது.
ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு தனது அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் கையளித்ததையடுத்து இது அறிவிக்கப்பட்டுள்ளது.
முத்திரையிடப்பட்ட அறிக்கையை பெற்றுக்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணம் நாளை அறிவிக்கப்படும் என அறிவித்தார்.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சார்பில் நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்ததுடன், நிபுணர் அறிக்கையைப் பெற்ற பின்னர் தமது சட்டத்தரணிகள் இந்த விடயம் தொடர்பில் சமர்ப்பணங்களை முன்வைக்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் இந்த கோரிக்கையை மேலதிக நீதவான் நிராகரித்துள்ளார்.
இவ்வாறான விசாரணையில் வெளி தரப்பினர் சாட்சியமளிக்க சட்டத்தில் இடமில்லை என தெரிவித்த மேலதிக நீதவான், அதற்கமைய அந்த கோரிக்கையை நிராகரித்தார்.
இதன்படி, தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள ஷாப்டரின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்ட மேலதிக நீதவான், சடலத்தை ஜாவத்தை மயானத்தில் அடக்கம் செய்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்போது பல்கலைக்கழகப் பணிகளுக்கு மத்தியில் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் இந்த விசாரணைக்கு ஆதரவளித்தமைக்காக நிபுணர் குழுவிற்கு தனது நன்றியையும் மேலதிக நீதவான் தெரிவித்ததாக எமது நீதிமன்ற செய்தியாளா் தெரிவித்தார்.