பொருளாதார பிரச்னையிலிருந்து இனப்பிரச்னைக்கான தீர்வை பிரித்து நோக்க முடியாதென்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அரசமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டு மென்று வலியுறுத்தியிருக்கின்றார். வடக்கு – கிழக்கில் வாழும் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கினால், பொருளாதார உதவிகளை வழங்கினால் மட்டும் போது மென்று கூறுவது சரியானதொரு கருத்தல்ல. நாட்டை நேசிப்பவர்கள் பேராடியாவது 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென்று அவர் குறிப்பிடுகின்றார். ரணில் விக்கிரமசிங்கவும் 13ஆவது திருத்தத்தை நடை முறைப்படுத்த வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் பேசியிருந்தார்.
அரசமைப்பிலுள்ள ஏற்பாடுகளை அமுல்படுத்த முடியாதவொரு நாட்டில் தமிழ் – சிங்கள மக்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாமென்று கூறுவது நகைச்சுவைக்கு உரியதாகும். இவ்வாறான தொரு பின்புலத்தில் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரிக்கைகள் இருந்தாலும் அதே வேளை, அதனை அமுல்படுத்தக் கூடாதென்று வாதிடும் குரல்களும் இல்லாமலில்லை. சிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில் தென்பகுதி கடும்போக்காளர்களை பகிரங்கமாக எதிர்த்து இதுவரையில் தீர்மானங்களை முன்னெடுத்ததில்லை.
சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் அவர் சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு முயற்சித்திருந்தார். ஆனால், அது நிறைவேறவில்லை. 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் செல்வதற்கான அரசியல் தீர்மானங்களை சந்திரிகா எடுத்திருந்தார் என்பது உண்மைதான். இன்று நாடு மோசமானதொரு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்ற சூழலில், இனப் பிரச்னைக்கான தீர்வை காண்பது அவசியமென்று ரணில் கூறுகின்றார். ஆனால், அவர் கூறுவதை நடைமுறைப்படுத்த அவர் துணிகரமான நடவடிக்கைகளை முன்னெடுப்பாரா?
இவ்வாறானதொரு சந்தேகம் தமிழர் பக்கத்தில் இருப்பதற்கு நியாயமுண்டு. ஏனெனில், கடந்த 35 வருடங்களாக அரசமைப்பில் இருக்கின்ற ஏற்பாடுகளை முழுமையாக அமுல்படுத்த முடியவில்லை. இந்தப்
பின்புலத்தில், இனியும் 13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுமா என்பதில் சந்தேகமுண்டு. 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாகக்கூறி காலத்தை மேலும் இழுத்தடிக்கவும் முயற்சிக்கலாமென்னும் சந்தேகம்உண்டு.
13ஆவது திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்கான இறுதி அரசியல் தீர்வல்ல என்பதே, அனைத்து கட்சிகளினதும் நிலைப்பாடாக இருக்கின்றது. ஆனாலும் அதனை தாண்டிச் செல்வதாயின் முதலில் அதனைஅமுல்படுத்துவதிலிருந்துதான் பயணிக்க வேண்டியிருக்கின்றது. 13ஆவது திருத்தச் சடத்தை தாண்டிய அரசியல் தீர்வொன்றை காணவேண்டுமாயின், அது புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டுவருவதன் ஊடாகவே மட்டுமே சாத்தியப்படும். ரணில் – மைத்திரி ஆட்சிக்காலத்தில்
அவ்வாறனதோர் அரசியல் யாப்பு ஒன்றைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் வெற்றிபெறமுடியுமென்று கூட்டமைப்பு நம்பியது. குறிப்பாக, சம்பந்தனும் சுமந்திரனும் அந்த முயற்சியின்மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தனர். இறுதியில் எதுவும் நடைபெறவில்லை. இந்தப் பன்புலத்தில், மீண்டுமோர் அரசியல் யாப்பு முயற்சியில் ஈடுபட்டால் மீண்டும் முன்னைய விடயங்கள்தான் நிகழும். மீண்டும் காலமே விரயமாகும். இந்த யதார்தங்களைக் கருத்தில் கொண்டு சிந்திக்கும்போதுதான், 13ஆவது திருத்தச்சட்டம் ஒரு தவிர்க்க முடியாத அரசியல் யதார்த்தமாக இருக்கின்றது.