அண்மைய காலங்களில் தென்னிந்திய கலைஞர்களின் இசைநிகழ்ச்சிகள் இலங்கையில் பரவலாக நடாத்தப்பட்டு வருகின்றன. இதனூடாக இரு நாடுகளுக்கிடையிலுமான வர்த்த ரீதியிலான நட்புறவுகள் வலுவடைந்துகொண்டே செல்கின்றன என்று கூறப்படுகின்றது. வெளிப்பார்வைக்கு பொருளாதார ரீதியாக சாதக நிலைமையினை காட்டி நின்றாலும் அதன் பின்னணியில் தமிழின வரலாற்றை மறைப்பதற்கான திட்டமிடப்பட்ட விடயங்களும் அதனுடன் தொடர்புபட்ட பல அரசியல் சூட்சுமங்களும் நிறைந்து காணப்படுகின்றன.
அந்த வகையில் கடந்த 21.10.2023 அன்று தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ”யாழ் கானம்” என்னும் இசை நிகழ்ச்சியை யாழ்ப்பாணத்தில் நடத்தியிருந்தார். குறித்த இசைநிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு வெளியானதும் அதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கஜேந்திரன் செல்வராஜா ஆகியோர் கோரிக்கை ஒன்றினையும் விடுத்திருந்தனர்.
அக்கோரிக்கை கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது, “கடந்த 1987 ஆம் ஆண்டு ஒக்டொபர் 21, 22 ஆகிய திகதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை இந்திய அமைதிப் படையினர் சுட்டுக் கொன்றனர். அநியாயமான முறையில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் உறவுகள் வருடா வருடம் இந்நாட்களில் நினைவுகூரப்பட்டு வருகின்றனர். உலகத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் இரசிகத்தளத்தைக் கொண்டிருக்கும் தாங்கள், தமிழ்மக்களின் வலிகளுக்கும், இழப்புக்களுக்கும் மதிப்பளித்து குறித்த திகதிகளை மாற்றி பொருத்தமான வேறொரு திகதியில் நிகழ்வை ஒழுங்கு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம்.” என்று கேட்கப்பட்டிருந்தது.
இதேவேளை சந்தோஷ் நாராயணன் குறித்த யாழ் கானம் இசை நிகழ்ச்சி குறித்து தொலைக்காட்சி சேவை ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு கூறியிருந்தார், இவ் இசை நிகழ்ச்சியினை செப்டம்பர் 30 ஆம் திகதி நடத்தவே நாம் தீர்மானித்திருந்தோம். 3000 தொடக்கம் 4000 பார்வையாளர்கள் இதற்கு வருவார்கள் என நாம் எதிர்பார்த்திருந்த நிலையில் அதிகளவானோர் வரக்கூடிய சாத்தியம் காணப்பட்டதனால் அக்டோபர் 21 ஆம் திகதிக்கு மாற்றியமைக்கும் படி ஒருங்கிணைப்பு குழு எம்மிடம் கேட்டுக்கொண்டது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில்தான் பாதுகாப்பான முறையிலும் புத்தாக்கத்துடனும் இதனை செய்து முடிக்கலாம் என அவர்கள் கூறியதற்கிணங்க அக்டோபர் 21 ஆம் திகதி அனைத்து விதத்திலும் ஏற்புடைய நாளாக இருந்தமையால் அந்த திகதியில் யாழ் கானத்தை செய்ய தீர்மானித்தோம் என்றார் . இதனூடாக அவர் அக்டோபர் 21 ஆம் திகதியை பொருத்தமான நாளாக கூறுவது எந்த அடிப்படையில் என்று இன்னும் புரியாமலே இருக்கிறது. அனைத்து காரணங்களையும் மீறி இந்நிகழ்ச்சி அக்டோபர் 21 ஆம் திகதி நடத்தப்பட்டிருக்கிறது. இவ் இசைநிகழ்ச்சிக்கு சென்றிருந்த இரு இளைஞர் குழுக்களிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு பின்பு அது கைகலப்பில் முடிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த இசை நிகழ்ச்சியானது தற்போதைய இளைஞர்கள் பார்வையில் வெறுமனே ஒரு களியாட்ட நிகழ்வாக தெரிந்தாலும் இதில் ஆராயப்பட வேண்டிய பல விடயங்களும் தமிழின உணர்வுகளுடன் தொடர்புபட்ட பல கேள்விகளும் மறைந்திருக்கின்றன. இதில் முதலாவது கேள்வி ; பார்வையாளர்களின் எண்ணிக்கைக்காக இசைநிகழ்ச்சியை 3 வாரங்கள் ஒத்திவைத்த நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினர் ஏன் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை கவனத்தில் எடுக்கவில்லை? , இதன் பின்னணியில் இந்திய படையினரால் கொல்லப்பட்டவர்களை நினைவேந்தல் செய்யும் தினத்தில் இந்திய இசை கலைஞர்களை கொண்டு இசை நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்தியமை எமக்கு சொல்லி நிற்கும் செய்தி என்ன?
அத்தோடு யாழ் கானம் இசை நிகழ்ச்சிக்குரிய நிதி மூலங்கள் குறித்தும் சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அத்தோடு இதன் ஏற்பாட்டாளரான அருண் செல்வராஜின் பின்னணி குறித்த செய்திகளை இந்தியாவின் முன்னணி ஆங்கில ஊடகங்கள் அம்பலப்படுத்தி இருக்கின்றன. அதாவது இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அருண் செல்வராஜ் இந்தியாவின் புலனாய்வு சேவையினால் (NIA) 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் 10 ஆம் திகதி இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்தார் என்கிற செய்திகளை வெளிக்கொண்டு வந்து இருக்கின்றன.
2012 ஆம் ஆண்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் புலனாய்வு வலையமைப்பை சேர்ந்த தமீம் அன்சாரியின் கைதைத் தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டு இருந்தார் என சொல்லப்படுகிறது. இவர் சிவகாமிநாதன் சரவணமுத்து என்கிற போலி கடவுசீட்டை பயன்படுத்தி சென்னையில் குடியேற முயன்றதோடு தென்னிந்தியாவின் மூலோபாய கட்டமைப்புகளை உளவு பார்க்க முனைந்ததாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
பாகிஸ்தான் வெளியக புலனாய்வு கட்டமைப்பு (ISI) அதிகாரியான அமீர் சுபைர் சித்தி உடன் கடற்படை தளங்கள், அதிகாரிகள் பயிற்சி கல்லூரி, இந்திய கடலோர கடற்படை வசதிகள், உட்பட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்களை பரிமாற்றம் செய்யப்பட்டதாக இவர் மீது தேசிய புலனாய்வு முகவர் அமைப்பு (NIA) குற்றம் சாட்டியிருந்தது.
இது மாத்திரமின்றி பாகிஸ்தான் புலனாய்வு வலையமைப்பின் அமீர் சுபைர் சித்தி, சிராஜி அலி, சாஹே ஆகியோரை அருண் செல்வராஜின் கூட்டாளிகளாவும் NIA அடையாளப்படுத்தி இருந்தது. அதனடிப்படையில் விசாரணை முடிவில் பிரிவு 121A of IPC மற்றும் பிரிவு 17 மற்றும் 18 of Unlawful Activities Prevention Act கீழ் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து இவருக்கு எதிராக 140 சாட்சிகளும் , 127 ஆவணங்களும் 100 நூற்றிற்கு மேற்பட்ட விடய ஆதாரங்களையும் முன்வைத்து நீதிமன்றத்தில் NIA சிறை தண்டனை பெற்று கொடுத்திருந்தது.
தண்டனை முடிவில் நாடு கடத்தப்பட்ட இவர் தற்போது இந்தியா உட்பட பல புலனாய்வு முகவர் அமைப்புகளுக்காக பணியாற்றுவதாக சொல்லப்படுகின்றது. அதேசமயம் குறித்த இசை நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவில் ராஜபக்ஸ சகோதரர்களின் முகவர் ஒருவரும் இருந்ததாக சொல்லப்படுகின்றது.
அரசியல் வெளிகளுக்கு அப்பால் இசை நிகழ்ச்சிகள் சமூகம் ஒன்றின் இயல்பான வாழ்வியலுக்கு பங்களிக்கும் அவசியத்தை யாரும் மறுத்து விட முடியாது. ஆனால் இனப்படுகொலை நினைவேந்தல்கள் குறிப்பாக வைத்தியசாலை தாக்குதல்கள் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில் அதன் யதார்த்தத்தை நீத்து போக செய்யும் ஏற்பாடாகவே இதை பார்க்கவேண்டியுள்ளது. அத்தோடு தமிழர் நிலங்களை வேட்டைக்காடாக மாற்றிவிட துடிக்கும் வெவ்வேறு சக்திகளை தெரிந்து கொள்வது இன்றைய காலகட்டத்தில் அவசியமாகின்றது.
ஒரு காலத்தில் தமிழ் இளைஞர்களை ”இயக்கத்திற்கு போயிட்டான், போயிட்டாள்” என்ற சமூகம், இன்று அவன், அவள் “ஐஸிற்கு, ஹெரேயினுக்கு” அடிமை எனக் கதறுகிறது. ஒரு காலகட்டத்தில் இளைஞர்கள் உன்னதமான இலட்சியங்களால் வழிநடத்தப்பட்டார்கள். ஆனால் இப்பொழுது அப்படியல்ல. இளைஞர்களை எப்படி அரசியல் நீக்கம் செய்யலாம், அவர்களை எப்படிப் போதைக்குள் மூழ்கடிக்கலாம், அவர்களுடைய கைகளில் எப்படி வாள்களைக் கொடுத்து மோத விடலாம், அவர்களுடைய நம்பிக்கைகளை, விசுவாசத்தை, கவனக் குவிப்பை எப்படி இடம் மாற்றலாம், அவர்கள் மத்தியில் இருந்தே எப்படி முகவர்களை உருவாக்கலாம், என்றெல்லாம் சிந்தித்து செயல்படுவதற்கு அரச பலமும் அரச வளங்களும் பயன்படுத்தப்படுகின்றன. அது ஒரு மையத்தில் இருந்து திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்படுகிறது. இளைஞர்களின் தமிழின உணர்வுகள் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு வடிவங்களில் மழுங்கடிக்கப்பட்டே வந்திருக்கின்றன.
ஒவ்வொரு கால கட்டத்திலுமுள்ள இளைஞர்களின் ரசனைகள் மற்றும் ஈடுபாடுகளுக்கமைய இந்த திட்டங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டு வருகின்றன. 1985 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் இளைஞர்கள் தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தில் பங்குபற்றுவதை தடுப்பதற்காக அன்றைய கால கட்டத்திலிருந்த அரசாங்கங்கள் பல்வேறு உத்திகளை கையாண்டன. குறிப்பிட்டு சொல்வதானால் இளைஞர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக வயது வந்தவர்களுக்கான திரைப்படங்கள், களியாட்டங்கள், மதுபாவனைகளுக்கு அவர்களை அடிமையாக்குதல் ஆகிய செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் செயற்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. அவ்வாறான ஒரு தேவை இன்றும் ஆளும் வர்க்கத்திற்கு தேவைப்படுகின்றது. இன்று தமிழர் பகுதியில் குறிப்பாக வடகிழக்கில் பெருகியுள்ள போதைப்பொருள் பாவனை, வாள்வெட்டு , வன்முறைகள், திருட்டு என்பவையெல்லாம் இவற்றின் வெளிப்பாடே. எனவே இந்த இக்கட்டான கால கட்டத்தில் தமிழ் தேசியம் பாதுகாக்கப்படவேண்டியதன் முக்கியத்துவத்தையும் அதில் தமிழ் இளைஞர்களின் பங்களிப்பையும் உறுதி செய்ய வேண்டிய கடப்பாடு தமிழ் தலைவர்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் அனைவரும் இருக்கிறது. தங்களுக்கிடையிலான அதிகாரப்போட்டிகள் மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு அப்பால் இதனை செய்ய தமிழ் தலைவர்கள் என்று தங்களை கூறி கொள்பவர்கள் முன்வருவார்களா?
நிலைமை எப்படி இருப்பினும் ஒவ்வொரு காலகட்டத்திலுமுள்ள இளைஞர்களும் தங்களது நினைவேந்தல்களூடாக தமிழின போராட்டத்தின் நியாயங்கள் மற்றும் கோரிக்கைகள் என்பவற்றை அடுத்த சந்ததியினருக்கு கடத்தும் ஒரு ஊடகமாக இருக்கவேண்டும். தங்களது தனிப்பட்ட சுகபோக கொண்டாட்டங்களில் மூழ்கிவிடாது தமிழ் தேசிய வரலாறு, அதன் பின்னணியிலுள்ள அரசியல், இவற்றை மூடி மறைத்து எம்மை பகடைக்காயாய் பயன்படுத்தும் தற்கால அரசியல் என்பவற்றை நன்குணர்ந்து செயற்படவேண்டியது இன்றையகாலத்தின் கட்டாயமாகிறது.