வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட யாழ்.- மானிப்பாய் – காரைநகர் வீதியை புனரமைப்பு செய்யுமாறு கோரிக்கை விடுத்து மூளாயில் மக்கள் நேற்று (10) வினோத போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
வீதியில் ஆங்காங்கே வெள்ளம் தேங்கி நிற்கும் பெரும் பள்ளங்களில் ஏர் பூட்டியும் மற்றும் உழவியந்திரங்களைக் கொண்டும் வயல் உழுவது போன்று பாசாங்கு செய்து நெல் விதைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்தில் முன்பள்ளி மற்றும் பாடசாலை மாணவர்களும் மூளாய், பொன்னாலை பிரதேச மக்களும் அதிக அளவில் பங்குபற்றினர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரணில் அரசாங்கமே எங்கள் மீது ஏன் இந்தப் பாரபட்சம், R.D.A அதிகாரிகளே உங்களுக்கு கண் இல்லையா?, வழக்கம்பரை தொடக்கம் பொன்னாலை வரை வாழும் மக்கள் மந்தைகளா?, வெள்ளத்தில் நீந்தியா நாம் பள்ளிக்கு வருவது போன்ற பல பதாகைகளைத் தாங்கியிருந்தனர்.