நாடு ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நோக்கி நகர்கின்றது. ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராகக் களமிறங்குவாரென்பதில் சந்தேகமில்லை. ரணிலின் கடந்த காலம் எதுவாக இருந்தாலும்கூட இன்றைய நிலையில், ரணில் விக்கிரமசிங்க தொடர்பான அபிப்பிராயங்கள் மாற்றமடைந்திருக்கின்றன. இவ்வாறானதொரு பின்புலத்தில், ஐக்கிய தேசியக் கட்சியை முற்றிலுமாக இல்லாவிட்டாலும் கணிசமானளவுக்கு பலப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படலாம். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தமது கட்சியை உடைக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டியிருக்கின்றார். இதன் மூலம் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவுகள் ஏற்படுமென்று சஜித் பிரேமதாஸ அச்சப்படுவது தெளிவாகின்றது.
சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்ததன் காரணமாகவே ஐக்கிய மக்கள் சக்தி உருவாகியது. சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்தது நாட்டு மக்களின் நன்மைக்காகவல்ல. தனது தந்தைபோல் தானும் ஜனாதிபதியாக வேண்டுமென்னும் ஆசையினால்தான் அவர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறினார். இதேபோன்று, சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளியேறினர். ரணிலுடன் இருந்தால் தாங்கள் தோல்வியடைந்து விடுவொமென்னும் அச்சத்தினாலேயே அவர்கள் அனைவரும் வெளியேறினர்.
இந்தப் பின்புலத்தில் நோக்கினால், முன்னர் ரணிலின் பக்கமாக இருந்தால் தோற்றுவிடுவோமென்று அஞ்சியவர்கள் தற்போது, ரணிலுடன் இணைந்தால் தங்களுக்கு நன்மையென்று கருதினால் – சஜித் பிரேமதாஸவை விட்டு வெளியேறுவதற்குத் தயங்கமாட்டார்கள். ஏனெனில், இங்கு எந்தவொரு கூட்டும் -எந்தவொரு உடைவும் நாட்டு மக்களின் நன்மை கருதி முன்னெடுக்கப்படுவதில்லை.
இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பலர் வெளியேறினால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பொதுவாகவே தென்னிலங்கை அரசியலைப் பொறுத்தவரையில் ஒரு கட்சியிலிருந்து பிறிதொரு கட்சிக்கு செல்வது சாதாரணமானதொரு விடயமாகும். அதனை சிங்கள மக்களும் பெரிதுபடுத்துவதில்லை. இதேபோன்றுதான் முஸ்லிம்கள் மத்தியிலும். ஆனால், தமிழ் அரசியல் சூழலில் நிலைமை முற்றிலும் மாறுபட்டது. கட்சி மாறுபவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவை பெறுவது சற்றுக் கடினமானது. எனினும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரால் வெற்றிபெற முடிந்தது. அதிலும் மொட்டு சின்னத்தில். இது தமிழ்த் தேசிய அரசியலுக்கானதோர் எச்சரிக்கையாகவும் இருக்கின்றது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பதாக, ரணில் விக்கிரமசிங்க தன்னை பலப்படுத்த வேண்டியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்தால், நிச்சயம் அவர் அதனைச் செய்துதான் ஆக வேண்டும். தற்போதைய சூழலில், ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்துக் களமிறங்கக் கூடியவர்களின் வாக்குகளை பெறக்கூடிய வல்லமையுடன் இருப்பவர்களென்றால் சஜித் பிரேமதாஸ மற்றும் அநுரகுமார திஸநாயக்க ஆகிய இருவரே முதன்மையானவர்கள். இவ்வாறானதொரு சூழலில், ஐக்கிய தேசியக் கட்சியை கட்டமைப்பு சார்ந்து பலப்படுத்த வேண்டிய தேவையுண்டு.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை அல்லது ரணிலை நோக்கி பலரும் அணி சேர்கின்றனர் – என்றவாறான, அரசியல் தோற்றப்பாட்டையும் காண்பிக்க வேண்டிய தேவையுண்டு. இந்தப் பின்புலத்தில் நோக்கினால் வெளியிலிருக்கும் பலரையும் தன்னை நோக்கி வருவதற்கான வியூகங்களை வகுக்க வேண்டிய அவசியத்தை ரணிலால் தவிர்க்க முடியாதுதான். ஆனால், சஜித் தன்னை பலமாக உணர்ந்தால் கட்சியை உடைக்க முற்படுவதாக அச்சப்பட வேண்டியதில்லை. சஜித்தின் அச்சம் அவரின் தலைமைத்துவ தகுதியின்மையின் விளைவா?