ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவினால் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் கடிதமொன்றை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று 18 நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சு தமது நடவடிக்கைகளில் தேவையற்ற தலையீடுகளை செய்ததாக குற்றம்சாட்டி அனுப்பப்பட்ட இந்த கடிதம், ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தடைக்கு வழி வகுத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் கிரெக் பார்க்லேவுக்கு கடந்த ஒகஸ்ட் மாதம் 28ஆம் திகதி ஐந்து கடுமையான குற்றச்சாட்டுகள் அடங்கிய குறித்த கடிதம் அனுப்பப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
விளையாட்டு சபையின் பணிப்பாளர் நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு தேவையற்ற வகையில் தலையீடு செய்ததாக கூறி, விளையாட்டுத்துறை அமைச்சுக்கு எதிராக இந்தக் கடிதத்தில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அலுவலகப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குமாறு கோரியதாகவும், லங்கா ப்ரீமியர் லீக் தொடரை நடத்துவதற்கான அனுமதி பெறுவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தலையீடு செய்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஸ்ரீலங்கா கிரிக்கெட் யாப்பை உருவாக்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தலையீடு செய்ததாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய விளையாட்டு நிதியத்திற்கு, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிதியில் 20 சதவீதத்தை வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீது தலையீடு செய்ததாக கூறப்படும் ஒரு மேலதிக விடயமும் அந்தக் கடிதத்தில் உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் கடந்த ஒகஸ்ட் 28ஆம் திகதி முன்வைக்கப்பட்டதாகவும், இதற்கு முன்னர் அனுப்பப்பட்ட மற்றுமொரு அறிக்கையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதிக்கும் சூழலை உருவாக்கியதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
இது ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு அதன் தலைவர் செய்யும் துரோகம் எனவும், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எழுத்துப்பூர்வ ஆதாரங்களுடன் அதை வெளிப்படுத்தியதும், குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு சபாநாயகரிடம் கோரியிருப்பதும் பாரதூரமானது என ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.