இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியையும் சூறையாடியது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த போரில் 11 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இதுதவிர, இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டு உள்ளனர். அவர்களை மீட்கும் தீவிர பணியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது.
இதற்காக, தரைவழி தாக்குதலையும் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேமில் உள்ள பிரதமர் நெதன்யாகு அலுவலகம் நோக்கி இஸ்ரேலிய பணய கைதிகளின் குடும்பத்தினர் பேரணியாக சென்றனர். அவர்களுடன் 30 ஆயிரம் பேர் இணைந்து கொண்டனர்.
இதுபற்றி ஒரே குடும்பத்தில் இருந்து 2 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களின் உறவினரான கோபி பென் அமி என்பவர் கூறும்போது, மந்திரிகளை சந்திக்க வேண்டும் என நாங்கள் கெஞ்சி வருகிறோம். பணய கைதிகளை திருப்பி கொண்டு வர என்னென்ன திட்டங்களை வைத்துள்ளனர்? என எங்களிடம் கூறும்படி கேட்கின்றோம்.
இந்த பேரணியில் எதிர்க்கட்சி தலைவர் யாயிர் லபிடும் கலந்து கொண்டார். இந்த பேரணி நிறைவடைந்ததும், போருக்கான மந்திரி பென்னி கந்திஜ் மற்றும் கண்காணிப்பு மந்திரி கதி ஐசன்கோட் ஆகியோரை சந்திக்கவும் பணய கைதிகளின் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.