சிறிலங்கா அதிபரின் நிறைவேற்று அதிகார முறையை இல்லாது செய்வது தொடர்பான எந்தவொரு ஒப்பந்தத்திலும் தாம் கையெழுத்திடவில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதிபரின் நிறைவேற்று அதிகார முறையை இல்லாது செய்வதற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஒப்பந்தத்தில் தாம் கைச்சாத்திட்டதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சிறிலங்கா அதிபர் அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதி என அண்மையில் நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டது.
நிறைவேற்று அதிகாரத்துடன் நியமிக்கப்படும் அதிபருக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்தப் பேரவை நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
நிறைவேற்று அதிகார முறையை இல்லாது செய்வதற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஒப்பந்தத்தில் நான் கைச்சாத்திட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், நான் ஒன்றை கூற விரும்புகிறேன்.
என்னிடம் எந்தவொரு அமைப்பும் இது தொடர்பில் பேசவில்லை. எந்தவொரு சங்கமும் என்னை முன்னிலையாகுமாறு கோரவுமில்லை.
எதிர்க்கட்சியை தவிர வேறு யாருக்கும் இந்த விடயம் தெரியாது. நான் தமிழ் கட்சிகளிடமும் இது தொடர்பில் வினவினேன். அவர்களும் தெரியாது எனக் கூறினார்கள்.
பின்னர் இதன் பிரதியொன்றை நான் பெற்றுக் கொண்டேன். எனினும், அதில் கைச்சாத்திடப்பட்டிருக்கவில்லை. சில கட்சியின் உறுப்பினர்கள் மாத்திரம் இதில் கைச்சாத்திட்டிருந்தனர்.
எனக்கும் இதுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. இலங்கையில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட காலிமுகத்திடல் போராட்டங்கள் மூலம் பல பிரச்சனைகள் ஏற்பட்டன.
முன்னாள் அதிபர் பதவி நீக்கப்பட்டதுடன், அதிபர் செயலகம் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. அத்துடன், அவர்கள் நாடாளுமன்றத்தையும் கைப்பற்ற முயன்றார்கள். நாடாளுமன்றத்தை பாதுகாக்க முடியாவிட்டால் நாம் அனைவரும் வீடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
இதனாலேயே, நான் நாடாளுமன்றத்தை பாதுகாக்குமாறு சிறிலங்கா இராணுவத்துக்கு உத்தரவிட்டேன்.
இதையடுத்து, காலிமுகத்திடல் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினர் முன்னிலையாகியிருந்தனர்.
இவ்வாறு முன்னிலையானவர்கள் உண்மையான நிலவரம் தொடர்பில் ஆராயாது முன்னிலையானார்கள். இதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சட்டத்தரணிகள் தொடர்பில் ஆராயப்பட வேண்டும்” – என்றார்.