கொழும்பு இந்துக் கல்லூரியின் பத்து வயது மாணவன் 08 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் (SLSCA) 13 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டாம் கட்ட முதல்தர போட்டியில் கொழும்பு இந்துக் கல்லூரியின் மாணவன் செல்வசேகரன் ரிஷியுதன் அபாரமாக பந்துவீசி ஓட்டங்கள் எதனையும் வழங்காது 08 விக்கெட்டுகளை வீழ்த்தி பாடசாலை மட்டத்தில் சாதனைப் படைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 24ஆம் திகதி கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் பத்தரமுல்லை எம்.டி.எச்.ஜயவர்தன மகா வித்தியாலயத்துக்கு இடையில் நடைபெற்ற போட்டிலேயே செல்வசேகரன் ரிஷியுதன் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
மேலும் முல்லேரியா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜெயவர்தன மகா வித்தியாலயம் முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை கொழும்பு இந்துக் கல்லூரிக்கு வழங்கியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்து கல்லூரி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்னிங்ஸை இடைநிறுத்தி ஜெயவர்தன மகா வித்தியாலயத்துக்கு துடுப்பெடுத்தாட பணித்தது.
தமது முதல் இன்னிஸுக்கு துடுப்பெடுத்தாடிய பத்தரமுல்லை எம்.டி.எச்.ஜயவர்தன மகா வித்தியாலயத்தால் 28 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
இந்துக் கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்திய பந்துவீசிய பத்து வயதுடைய செல்வசேகரன் ரிஷியுதன் அபாரமாக பந்துவீசி ஓட்டங்கள் எதனையும் கொடுக்காமல் 08 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அவர் வீசிய ஓவர்களின் எண்ணிக்கை 9.4 ஆகும். ஆனால், அதில் 9 ஓவர்கள் ஓட்டமற்ற ஓவர்களாக இருந்துள்ளன.
இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸை விளையாட முடியாத காரணத்தினால் கொழும்பு இந்து கல்லூரி போட்டியில் வெற்றி பெற்றது