பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மதத்தின் பெயரால் அரசியலை நடத்துபவர் என்ற குற்றச்சாட்டினை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்வந்திருந்தார்.
நேற்றைய பாராளுமன்ற விவாதத்தின்போதே இக்குற்றசாட்டினை முன்வைத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றில் உரையாற்றும்போது, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் அதற்கு வெளியிலும் பணியாற்றும் அரச அதிகாரிகள் நிர்வாக முறைகேடாய் நடப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். உதாரணமாக ரிதி தென்ன, ஜெயந்தியாய, காரமுன போன்ற கிராம சேவக பிரிவுகள் புதிதாக உருவாக்கப்பட்டு கோறளைபற்று மத்தி பிரதேச செயலகத்துடன் இணைத்த அறிக்கை வந்த பிற்பாடும் அதனை வர்த்தமானியில் வெளிவருவதற்கு தடை விதித்துக்கொண்டும் நடக்க விடாமல் தடுத்து கொண்டும் அந்த பிரதேசங்களை கோறளை பற்று தெற்கு , கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகங்களூடாக நிர்வகிக்க முயலுகின்ற நிலை காணப்படுகின்றது என தெரிவித்திருந்தார். மேலும் ஒரு கிராம சேவக பிரிவிற்கு இரண்டு கிராம சேவகர்கள் பணியாற்றுகின்ற நிலைமை காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
அத்துடன் தியாகவெட்டுவான் பிரதேச மக்கள் ஒரு மைல் தூரத்திலுள்ள கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் தங்களது சேவைகளை பெற்றுக்கொள்ளகூடிய சூழல் இருந்தும் வேண்டுமென்றே 30, 40 கிலோமீற்றர் தொலைவில் இருக்கின்ற கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்திற்கு சென்று தங்களது சேவைகளை பெற வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் வேண்டுமென்றே நிர்வாக பயங்கரவாதம் மேற்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவித்திருந்தார்.
இவரது கருத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார், ரவூப் ஹக்கீமின் அரசியல் உருவாக்கத்தின் பின்னர் தான் இன மத ரீதியிலான பிரதேச பிரிவுகள் கல்வி வலய பிரிவுகள் உருவாக்கம் பெற்றன. சமூகங்கள் பிளவு படுவதற்கு இவரும் ஒரு காரணம் என்றார். தொன்மையான கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக பகுதியில் புனாணை கிழக்கு முக்கியமான பிரதேசம். அதில் மகாவலிக்கு ஒதுக்கப்பட்ட காணிகளும் வர்த்தமானியில் வெளிவந்த வனஇலாகா பிரதேசங்களும் உள்ள பகுதியில் காரமுனை என்ற தனியொரு கிராம சேவக பகுதியை தரவேண்டுமாம் என கேட்கிறார். இவர் மத ரீதியிலான அரசியலை செய்ய பார்க்கிறார். இதற்கு தீர்வுகாண முற்பட்டால் எல்லா இடங்களிலும் மதத்தின் பெயரால் பிரதேசங்களை துண்டாக்க வேண்டிய நிலை ஏற்படும். நாடு தற்போது இருக்கும் நிலையைவிட வேறுறொரு திசைக்கு மிக மோசமான நிலைக்கு தள்ளப்படும் என சுட்டிக்காட்டினார்.