நேற்றையதினம் (03.12.2023) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசம் தென் எருவில் பற்று , நாகதம்பிரான் கோவில் வீதியில் வீதி அபிவிருத்தி பணிகள் நடைபெற்று கொண்டிருந்த வேளையில் இரு கட்சியினருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறிய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இந்த காணொளி தொடர்பில் தெரியவருவதாவது,
2022 ஆண்டுக்கான பிரதேச சபை உள்வீதிகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் நிதி ஒதுக்கீட்டில் களுவாஞ்சிகுடி பிரதேச தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவாளர் தலைமையில் வீதி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
குறித்த வீதியில் 8 இஞ்சு அளவில் போடப்படவேண்டிய வீதியானது 4 இஞ்சு அளவில் போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி தமிழரசு கட்சியின் களுவாஞ்சிகுடி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளரிடம் தெரியப்படுத்தியுள்ளார்.
இதனால் தமிழரசு கட்சியின் களுவாஞ்சிகுடி பிரதேச சபை முன்னாள் உறுப்பினருடன்,சம்பவ இடத்திற்கு வந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வீதிகளை ஆராய்ந்து கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் களுவாஞ்சிகுடி ஆதரவாளர்கள்,தமிழரசு கட்சியின் களுவாஞ்சிகுடி பிரதேச சபை முன்னாள் உறுப்பினருடன் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு முற்றிபோன வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளதுடன் தமிழரசு கட்சியின் களுவாஞ்சிகுடி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையிலும்,தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் களுவாஞ்சிகுடி ஆதரவாளர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.