பொலிஸார் பொலிஸூற்குரிய வேலையை பார்க்க வேண்டும். அதனை விடுத்து கிராம சேகவர் வேலையை பார்க்க கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
கிருலபனை,வெள்ளவத்தை,கொட்டாஞ்சேனை, நாரஹேன்பிட்டிய, தெஹிவளை,பம்பலப்பிட்டி, மட்டக்குளி,முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்களை இலக்காக கொண்டு தகவல் திரட்டும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸ் கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் தகவல் கோருவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
ஆனால் விண்ணப்பங்கள் சிங்கள மொழியில் மாத்திரம் விநியோகிக்கப்படுகின்றன. பொலிஸ் கட்டளைச்சட்டம் பற்றி பேசும் இலங்கை பொலிஸூக்கு நாட்டின் அரசியலமைப்பு சட்டம் தெரியவில்லை.
தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் நாட்டின் அரசகரும மொழிகளாக அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.ஆனால் சிங்கள மொழியில் மாத்திரமே சகல விண்ணப்பங்களும் வழங்கப்படுகின்றன.
உண்மையில் இது இது டிரான் அலஸின் பொலிஸ் இராச்சியமா, விக்கிரமசிங்கவின் பொலிஸ் இராச்சியமா ? அல்லது தேசபந்துவின் பொலிஸ் இராச்சியமா? இந்த நாட்டில் யுத்தம் இல்லை,பயங்கரவாதம் இல்லை அவ்வாறான நிலையில் ஏன் இன்னும் வீடு வீடாக செல்கின்றீர்கள் என் கேள்வி எழுப்பியுள்ளார்.