இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள் என்பர். இன்றைய கால கட்டத்தில் இளைஞர்களின் போக்கானது ஒட்டுமொத்த சமுகத்திற்கும் அச்சுறுத்தலாகவே காணப்படுகிறது. சமீப காலத்தில் குறிப்பாக மட்டக்களப்பில் இளைஞர்கள் தொடர்பிலான பல செய்திகளை பார்க்கின்றோம். தற்கொலை, போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் வியாபாரம், சமூக சீர்கேட்டு நடவடிக்கைகளில் ஈடுபடல் என அடுக்கி கொண்டே போகலாம்.
மட்டக்களப்பு பாலமீன்மடுவை சேர்ந்த 16 வயதுடைய மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாவரும் அறிந்ததே. தற்கொலைக்கான பின்னணி ஆராயப்பட்டு வரும் நிலையில், பெற்றோர் தொலைபேசி வாங்கி கொடுக்கவில்லை எனவும் அதனால் குறித்த மாணவனின் நண்பர்கள் அவரை கேலி செய்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் கூட இத்தற்கொலைக்கு காரணமாக அமைந்திருக்க கூடுமென அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர். கொரோனா காலங்களில் zoom ஊடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே தொலைபேசி பாவனை மாணவர்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் பல மாணவர்கள் பயனடைந்திருந்தாலும் சில மாணவர்களின் வாழ்க்கைமுறையை பாதித்துக்கொண்டே வருகின்றது.
மேலும் கடந்த சில நாட்களாக ” பிரத்தியேக வகுப்பிற்கு செல்லும் பிள்ளைகளை பெற்றோர் கவனிப்பதில்லையா?” என கேள்வி கேட்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வந்தது. இரு இளைஞர்கள் அண்ணளவாக 16 வயதுடைய இரு மாணவிளுடன் கை சேட்டை செய்யும் காணொளியே அது. இதனை ஒரு தரப்பினர் கலாசார சீர்கேடாக பார்த்தாலும் மற்றைய தரப்பினர் அவர்களுடைய தனிப்பட்ட சுதந்திரமாகவே பார்க்கின்றது.
மாணவர்கள் கல்வி நடவடிக்கையில் ஈடுபடும் காலங்களில் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது உண்மையில் பெற்றோராலும், சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றே. சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் இவ்வயது பிரிவினரின் நிர்வாண புகைப்படங்கள் வெளியாகி அது ஒரு பாரிய சமூக பிரச்சனையாக மாறியது. கால கட்டங்கள் மாறலாம், சந்ததிகள் மாறலாம், ஆனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் சவால்களும் அப்படியே தான் இருக்கின்றன.
மேலும் ஒரு மாதத்திற்கு முன்னர் மட்டு நகர் பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அது மட்டுமல்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு பிரபல பாடசாலையில் மாணவர்களின் புத்தகப்பைகளை சோதித்த வேளையில் அதிகளவான போதைப்பொருட்கள் சிக்கின. பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள், அவர்களுடைய நண்பர்களின் பின்னணிகளை ஆராய்ந்தறிதல் ஒவ்வொரு குடும்பத்தினரதும் கட்டாய கடமையாகும்.
கலாச்சார நாகரிக வளர்ச்சி, தொழிநுட்ப முன்னேற்றம் என பல காரணிகள் இப்பிரச்சனைகளில் செல்வாக்கு செலுத்துகின்றன. இருப்பினும் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளில் கண்டிப்பையும் கண்காணிப்பையும் வைத்திருந்தால் மாத்திரமே இவ்வாறான பிரச்சனைகள் தோற்றம் பெறாமல் தடுக்க முடியும். காரணம் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அதிகம் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் அவர்களின் பெற்றோரே.