ஒவ்வொரு விளையாட்டுக்களிலும் தமது திறமையை வெளிப்படுத்தி வரும் பாடசாலைகளை விளையாட்டுத்துறை பாடசாலைகளாக நியமித்து, அவற்றை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற வாய்மூல கேள்வி விடைக்கான வேளையில் பிரேம்நாத் சீ தொலவத்த எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலை விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக 1500 மில்லியன் ரூபா அடுத்த வருடத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை கிராமிய ரீதியில் திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும்.
அதேவேளை விளையாட்டுக்களில் திறமையை வெளிப்படுத்தாத பாடசாலைகளை விளையாட்டுத்துறை பாடசாலைகளாக பெயரிடுவது பொருத்தமற்றது.
தற்போதைய விளையாட்டு பாடசாலைத் திட்டம் தோல்வியடைந்துள்ளது. வலல ஏ ரத்னாயக்க பாடசாலை விளையாட்டு பாடசாலை அல்ல. எனினும் அதில் சிறந்த விளையாட்டு வீரர்கள் உருவாகியுள்ளார்கள். அவர்கள் சர்வதேச ரீதியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்கள் என்றார்.