மனிதத்தினை உலகுக்கு வெளிப்படுத்திய ஜேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்துமஸ் பிறப்பினை முன்னிட்டு நேற்று நள்ளிரவு (24) இலங்கை பூராவும் உள்ள ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.
அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்துமஸ் வழிபாடுகள் மாவட்டத்தின் முதல் பேராலயமான புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன.
மரியாள் பேராலயத்தில் பேராயர் ஜோசப்பொன்னையா ஆண்டகை தலைமையில் இதன்போது விசேட ஆராதனைகள் நடைபெற்றன.
இதன்போது ஜேசு பிறப்பினை குறிக்கும் வகையில் பாலன் பிறப்பு கொட்டில் திறக்கப்பட்டு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் ஆராதனைகள் நடைபெற்றதுடன் கரோல் கீதங்களும் பாடப்பட்டன.
பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவில் மீளவும் நாட்டில் நீடித்த அமைதியும் மகிழ்ச்சி நிலவவும் விசேட பிரார்த்தனையும் ஆயரினால் நடாத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் விசேட கூட்டுத்திருப்பலி ஆலயத்தின் பங்குத்தந்தை மற்றும் அருட்தந்தையர்கள்,ஆயர் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது. கிறிஸ்துமஸ் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பலத்த பாதுகாப்பினை வழங்கியிருந்தது.
இன்றைய நாளிலேயே கிறிஸ்துமஸ் ஆராதனையின் போது முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் இந்த தேவாலயத்தில் வைத்து ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.