ஜனாதிபதி புகைப்படம் எடுப்பதும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடத்துவதும் அரசியல் ரீதியாக தமிழர்களின் கலாச்சார அழிவுக்கு வித்திடும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் நேற்று (06.01.2024) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும், வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு எதிரான பாரிய இன அழிப்பு போரை முன்னெடுத்த இனவாத ஆட்சியாளர்கள், சிங்கள பௌத்தத்தை முன்னிறுத்தியும் அபிவிருத்தி எனும் போர்வையிலும் தமிழர் தாயகத்தின் நிலங்களை ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், ஜனாதிபதி, கில்மிஷாவிற்கு பாராட்டு தெரிவித்து புகைப்படம் எடுப்பதும், கிழக்கு மாகாண ஆளுநர் பொங்கல் விழா எனும் போர்வையில் ஜல்லிக்கட்டை அறிமுகப்படுத்துவதும் அரசியல் ரீதியான தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு அழிவுக்கு வித்திடும் செயல்களாகும்.
இதனை சிவில் சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் வன்மையாக கண்டிப்பதோடு தொடர்ந்து இதற்கு இடமளிக்கவும் கூடாது. இல்லையேல் வீட்டுக்குள் புற்றாக அது வளர்ந்து விடும்.
தென்னிந்திய திரைப்படங்கள் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு இலங்கையில் திரையிடப்பட்ட காலம் போய் தென்னிந்திய தொலைக்காட்சி அலைவரிசைகள் நாள்முழுவதும் பலதிரைப்படங்களை காட்சிப்படுத்துவதோடு அதனோடு ஒட்டிய கலாச்சாரத்தை ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் மையம் கொள்ளும் அளவுக்கு விரிவுபடுத்தி உள்ளன.
வடக்கு, கிழக்கும், மலையகமும் இதனால் இந்தியாவின் இன்னொரு மாநிலமாக தோன்றியது என சிந்திக்க வைத்துள்ளது.