சுடுகாட்டில் சடலத்தை எரியூட்டுவதற்கு ஒரு சடலத்துக்கு மேலதிகமாக 5,000 ரூபாயை அறவிட்டு 5,50,000 ரூபாயை மோசடி செய்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மாத்தளை மாநகர சபையின் பணியாளர் இம்மாதம் 30 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டு மாத்தளை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பெண்ணொருவரே, நீதவான் ஆர்.பீ.கே.என். என் கோங்கேயின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாத்தளை மாநகர சபையில் பணியாற்றும் நயனா பிரியதர்ஷினி என்பவரே இவ்வாறு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.
மாத்தளை மாநகர சபையின் அதிகாரத்துக்கு உட்டப பிரதேசங்களைச் சேர்ந்தவர்களிடம் சடலமொன்றை எரியூட்டுவதற்கு 20 ஆயிரம் ரூபாயும், மாநகர சபையின் அதிகாரத்துக்கு உட்படாத பிரதேசங்களைச் சேர்ந்தவர்களின் சடலம் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயும் அறவிடப்படவேண்டும்.
எனினும்,மாத்தளை மாநகர சபையின் அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் மரணமடையும் ஒருவரை எரியூட்டுவதற்கு 25,000 ரூபாய் என்றடிப்படையில் போலியான பில்களை தயாரித்து, அதனூடாக சடலமொன்றுக்கு 5000 ரூபாய் என்றடிப்படையில் மோசடி செய்துள்ளார்.
இதன்படி, 5,50,000 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், குறித்த பெண் பொதுச் சொத்து சட்டம் 1982/எண் 12 இன் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.