பாராளுமன்றில் மின்சாரக் கட்டணம் பற்றாக்குறையில்லாமல் தொடர்ச்சியாக செலுத்தப்பட்டு வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தினாலோ அல்லது ஜனாதிபதி செயலகத்தினாலோ மின்சார கட்டணம் செலுத்துவதில் தற்போது நிலுவை இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் மின்சாரக் கட்டணம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்றம் மின்கட்டணத்தை செலுத்தவில்லை என அறிவித்து பாராளுமன்றத்தை அவமதித்த ரஞ்சன் ஜெயலாலை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவிற்கு அழைத்து சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
7 கோடி ரூபா மின்சார கட்டணத்தை செலுத்தாமல் பாராளுமன்றம் செயலிழந்துள்ளதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாகவும் அதில் உண்மையில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.