மூன்று பில்லியன் ரூபாய் இலாப வருமானத்தை திறைச்சேரிக்கு செலுத்தியுள்ளோம். பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருந்த லிட்ரோ நிறுவனம் தற்போது இலாபமடைந்துள்ளது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள லிட்ரோ நிறுவனத்தின் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் லிட்ரோ நிறுவனம் ஸ்ரீ லங்கா காப்புறுதி கூட்டுத்தாபனத்துக்கு 1.5 பில்லியன் ரூபாய் இலாப வருமானத்தை செலுத்தியுள்ளோம்.
தற்போது 1.5 பில்லியன் ரூபாய் இலாப வருமானத்தை ஸ்ரீ லங்கா காப்புறுதி கூட்டுத்தாபனம் ஊடாக திறைச்சேரிக்கு செலுத்தியுள்ளோம்.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக பதவியேற்கும்போது நிறுவனம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது. முறையான முகாமைத்துவம் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் ஊடாக நிறுவனம் தற்போது இலாபமடைந்துள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டரின் பாதுகாப்புத் தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொது காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியை முகாமைத்துவம் செய்து எரிவாயு சிலிண்டரின் விலையை ஸ்திரமான நிலையில் பேணுகிறோம். எரிவாயு விலை அதிகரிப்பால் நிறுவனத்துக்கு சொற்பளவிலான இலாபமே கிடைக்கப் பெறுகிறது என்றார்.