நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிவாயு, எரிபொருள், அரிசி, கோதுமை மா என பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வடைந்ததை தொடர்ந்து சகல பொருட்களின் விலைகளும் படிப்படியாக அதிகரித்தன. அதிலும் குறிப்பாக உணவுப்பொருட்கள், பேக்கரி உற்பத்தி பொருள்களின் விலைகள் உடனடியாக அதிகரித்தன. இவற்றிற்கான விலை அதிகரிப்பு நள்ளிரவு ஏற்பட்டால் அன்றைய காலை உணவை கூட அதிகரிக்கப்பட்ட புதிய விலைக்கே வாங்குவோம்.
ஆனால் தற்போது உணவு பொருள் உற்பத்தியுடன் தொடர்புடைய அத்தியாவசிய பொருட்களான எரிவாயு, எரிபொருள், கோதுமைமா போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டாலும் உணவு பொருட்களின் விலைகள் இன்னும் குறைக்கப்படாமலே உள்ளன. அதிலும் மட்டக்களப்பு நகர் பகுதியை அண்டிய சில பேக்கரிகள், பிரசித்தி பெற்ற உணவு விடுதிகளில் இன்னும் அதிகரிக்கப்பட்ட விலைகளில் தான் உணவுப்பொருட்கள் விற்கப்படுகின்றன என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். விலை அதிகரிப்பிற்கு முன்னர் 3 பரோட்டா, கறி என்பன 50 ரூபாவிற்கு விற்கப்பட்டன. விலை அதிகரிப்பிற்கு பின்னர் அதே 50 ரூபாவிற்கு ஒரு பரோட்டாவும் , சம்பலும் விற்கப்பட்டன. விலை குறைப்பிற்கு பின்னர் இந்நிலை மாறாமல் இருப்பதாகவே மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
கடந்த தினங்களுக்கு முன்னர் உணவுப்பொதிகள், கொத்துரொட்டி, ப்ரைட் ரைஸ் என்பவற்றின் விலைகள் 20% குறைப்பட்டுள்ளன என உத்தியோகபூர்வமாக அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் வர்த்தக நிலையங்கள் குறைக்கப்பட்ட விலையில் தான் இப்பொருட்களை பொது மக்களுக்கு விற்பனை செய்கின்றனவா என பரிசீலிக்க தவறிவிட்டது என்றே கூறலாம்.
நகர்புறத்திலிருந்து மிகத் தொலைவிலுள்ள கிராமப்புறங்களில் கூட உணவுப்பொருட்கள் இப்பொழுதும் குறைந்த விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வள கிடைப்பனவு, போக்குவரத்து, தொடர்பாடல் என அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற பல சிரமங்களை எதிர்கொள்ளும் இக்கிராமப்புற மக்களே குறைந்த விலைகளின் உணவுப்பண்டங்களை விற்பனை செய்யும்போது , சகல வசதிகளும் காணப்படும் நகர்ப்புற வர்த்தக நிலையங்கள் ஏன் விலைகளை குறைக்காமல் இருக்கின்றன? இதுதான் இலாபமீட்டும் தந்திரோபாயமா? என தெரியவில்லை.