இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் குகதாசன் அவர்களே கட்சியின் மகாநாடு மட்டுமே பிற்போடப்பட்டுள்ளதாகவும் தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகமே சட்ட ரீதியாக இயங்கும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நேற்று திருகோணமலையில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலளார் சந்திப்பு நேற்று களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது கட்சி காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழரசுக்கட்சியின் மாநாட்டுக்கான ஆலோசனைக்கூட்டமாக தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதன்போது சுமந்திரன் அவர்களை உபதலைவராக நியமிக்குமாறு சிறிதரன் கோரியிருந்தார். எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாது தம்மை பொதுச்செயலாளராக நியமிக்குமாறு இங்கு சுமந்திரன் கோரிக்கை விடுத்திருந்தார். கட்சி பிளவுபடாமல் அனைவரையும் ஒருங்கிணைத்து கொண்டுசெல்லவேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆனால் இதன்போது செயலாளராக மட்டக்களப்பினை சேர்ந்த சிறிநேசன் அவர்களும் திருகோணமலையை சேர்ந்த குகதாசன் அவர்களும் அம்பாறையை சேர்ந்த கலையரசன் அவர்களும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குலநாயகம் அவர்களும் செயலாளர் பதவிக்காக கோரிய நிலையில் அங்கு குழப்ப நிலைமை ஏற்பட்டபோது புதிய தலைவர் சிறிதரன் அவர்கள் அனைவரும் கலந்துரையாடி குகதாசன் அவர்களை முன்மொழிந்த நிலையில் அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அதனை மீண்டும் சிலர் எதிர்த்ததன் காரணமாக குழப்ப நிலைமை ஏற்பட்டது. இதன்போது பதில் செயலாளராக கடமையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் பொதுச்சபையின் தீர்மானங்களை வாக்கெடுப்புக்கு விடுத்தபோது அதனை பொதுச்சபை ஏற்றுக்கொண்டு வாக்களிப்பு ஊடாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் அதனை சிலர் மீண்டும் எதிர்த்தன் காரணமாக கூட்டம் முடிவுறுத்தப்பட்டதுடன் மகாநாடும் பிற்போடப்பட்டது.எனினும் புதிய நிர்வாகவே சட்ட ரீதியான நிர்வாகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளதனால் அதுவே நிர்வாகமாக ஏற்றுக்கொள்ளப்படும்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு செயலாளர் பதவி தேவையென்பதில் அனைவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சிலர் முன்னெடுத்த வேண்டத்தகாத செயற்பாடுகளே அந்த நிலைமையினை இல்லாமல் செய்தது என்றார்.