இலங்கை பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுபட்டு 75 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில் ஒரு தோல்வியடைந்த நாடாக மாறியிருக்கின்றது – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்திருக்கின்றார். இலங்கை 75ஆவது ஆண்டில்தான் தோல்வியடைந்த நாடாக மாறியிருக்கின்றதா?
சந்திரிகாவின் தந்தையார் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தனிச்சிங்கள சட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் இலங்கையின் சிங்கள – பௌத்த இனவாத அரசியலுக்கு புதிய முகத்தை வழங்கினார். ஆனால், அதே பண்டாரநாயக்க 1926இல் இலங்கையை மூன்று சமஷ்டி அலகுகளாக மாற்றும் யோசனையை முன்வைத்திருந்தார். அந்தவேளையில், அதனை அன்றைய கொழும்பு தமிழ் தலைமைகள் எதிர்த்திருந்தன.ஆனால், அரசியலில் அதிகாரத்தை கைப்பற்றும் மோதலில் பண்டாரநாயக்கவின் முற்போக்கான நிலைப்பாடு காணாமல் போய்விட்டது. தமிழர் மீதான விரோத இனவாத நிலைப்பாட்டின் மூலம் தென்னிலங்கையின் அதிகார அரசியல் எப்போது கருக்கொண்டதோ அப்போதே இலங்கைத் தீவின் தோல்வி அரசியல் அத்தியாயம் ஆரம்பித்துவிட்டது. இந்தத் தோல்வி அரசியலுக்கு இரண்டு முறை சந்திரிகாவும் தலைமை தாங்கியிருக்கின்றார் என்பதுதான் வரலாறு.
இன்று நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும்போதுதான் நாட்டின் தோல்வி பற்றி தென்னிலங்கையில் உரையாடப்படுகின்றது. ஆனால், இப்போதும்கூட பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாக இனவாத அரசியலை நோக்குவதற்கு தென்னிலங்கை தயாராக இல்லை. இப்போதும் நாட்டின் தேசிய இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் வெளிப்படையாக உரையாடுவதற்குத் தயாராக இல்லை.அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தைக்கூட
முழுமையாக அமுல்படுத்துவதற்கு தயாராக இல்லை. இந்த பின் புலத்தில் நோக்கினால் அரசியலமைப்பிலுள்ள விடயங்களைக்கூட அமுல்படுத்த மறுக்கும் தோல்வியடைந்த நாடுதான் இலங்கை. நாட்டின் அரசியலமைப்பிலுள்ள விடயங்களையே அமுல்படுத்த மறுக்கும் ஒரு நாட்டின் ஆட்சியாளர்கள் எவ்வாறு வெற்றிபெற்றவர்களாக இருக்க முடியும்? இலங்கையை ஒரு தோல்விடைந்த நாடாக்கியதில் சிங்கள – பௌத்த கட்டமைப்புக்களே பிரதான பங்கு வகித்திருக்கின்றன. இந்த உண்மையை எப்போது சிங்கள அரசியல் சமூகம் உணர்கின்றதோ- அப்போதுதான் இலங்கைக்கானதொரு புதிய அரசியல் கலாசாரம் தொடர்பில் தென்னிலங்கை சிந்திக்க முற்படும். அதுவரையில், இந்த நாடு தோல்விடைந்த நாடாகவே தொடரும்.
சிங்கள அரசியல்வாதிகள் சிங்கள – பௌத்த மத பீடங்களிலிருந்து அரசியலை விடுவிக்காவிட்டால் எந்தவொரு முன்னேற்றகரமான மாற்றங்களும் இந்த நாட்டில் இடம்பெறப் போவதில்லை. எத்தனை ‘அரகலய’க்கள் வந்தாலும்கூட நாட்டின் சிங்கள – பௌத்த கட்டமைப்புகளின் கற்கால சிந்தனைகளின்மீது கேள்வி எழுப்பாவிட்டால், ‘அரகலய’க்களால் எந்தவொரு பயனும் ஏற்படப் போவதில்லை. இவ்வாறான ‘அரகலய’க்களும் சில புதிய சிங்கள-பௌத்தவாதிகளை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கே பயன்படும்.