இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர்களுக்கு சுதந்திரமில்லாத நாளாக பிரகடனப்படுத்தி அன்றைய தினம் வடக்கிலும் கிழக்கிலும் மாபெரும் எதிர்ப்பு பேரணியை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி திருமதி அ.அமலநாயகி ஆகியோர் விசேட ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்தினார்கள்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் நான்காம் திகதி இலங்கை அரசினால் சிறப்பான முறையில் சுதந்திர தினத்தினை கொண்டாடுவதற்கு பாரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது ஆனால் நாங்கள் தமிழ் மக்களாகிய நாங்கள் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் எப்போதுமே ஒரு சுதந்திரம் இல்லாதவர்களாக தான் வாழ்ந்து கொண்டு வருகின்றோம்.
எதிர்வரும் நான்காம் திகதி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் இணைந்து வடக்கிலும் கிழக்கிலும் பாரிய ஒரு எதிர்ப்பு பேரணி ஏற்பாடு செய்திருக்கின்றோம். இந்தப் பேரணி தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லாத ஒரு கருப்பு தினமாக பிரகடனப்படுத்தி அந்த பேரணியை அமைதியான முறையில் செய்வதற்கு நாங்கள் ஏற்பாடு செய்திருக்கின்றோம். அந்த வகையில் அனைத்து தமிழ் தேசியம் சார்ந்த தமிழ் மக்களாக நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு அந்த சுதந்திர நாளை சிங்கள அரசியல் தலைமைகள் கொண்டாடி வரும் அந்த சுதந்திரநாளை கரி நாளாக பிரகடனப்படுத்தி பாரிய ஒரு அமைதியான எதிர்ப்பு பேரணியாக நாங்கள் உலகத்திற்கு அறியப்பட்ட வேண்டிய ஒரு தருணம் இதில் வரும் நான்காம் திகதி ஆகும்.
அந்த வகையில் அனைத்து மத குருமார்களும், அரசியல் தலைவர்கள், அரசியல் பங்காளர்கள், மற்றும் பொதுமக்கள், காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறவுகளின் அங்கத்தவர்கள், உறவினர்கள் அனைவரும் பெருமளவு ஊடகவியலாளர்கள் இதில் முக்கியமாக பங்கு பெற்று அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பேரணியில் கலந்து கொண்டு மாபெரும் ஒரு எழுச்சிப் பேரணியாகவும் எமது தமிழர்களுக்கு எந்தவிதத்திலும் சுதந்திரம் இல்லை என்பதனை உலகிற்கு எடுத்துகாட்ட வேண்டிய ஒரு கடமையும் இருக்கின்றது.
76 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கை அரசு எங்களுடைய மக்களுக்கு ஏன் நாங்கள் சாப்பிடும் உரிமை பேசும் உரிமை எங்களுடைய உறவுகளை தேடும் உரிமை கூட இல்லாத ஒரு சந்தர்ப்பத்தில் தான் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம் இப்போது பார்க்க போனால் மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் மிருகங்களுக்கு கூட உணவு சாப்பிடும் உரிமை இல்லாத நிலையில் மக்கள் அல்லல்ப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து இருக்கின்றார்கள் இந்த பண்ணையாளர்கள் பெரும் அவதியுற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நெருக்கடியில் தான் இந்த இலங்கை அரசு 76 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கின்றார்கள் அதை நாங்கள் புறக்கணிக்கும் முகமாக எங்களுடைய கிழக்கு மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அம்பாறையிலும் திருகோணமலையிலும் இருந்து பாதிக்கப்பட்ட மக்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லடி பாலத்தில் தொடங்கி காந்தி பூங்கா வரை இந்த பேரணியை அமைதியான முறையில் செய்வதற்கு தீர்மானித்து இருக்கின்றோம். யாவரும் அச்சம் கொள்ளாது எங்களுடைய உரிமைக்காக எமது உறவுகளுக்காக எங்களுடைய பேச்சு சுதந்திரத்திற்காக நாங்கள் வாழும் சுதந்திரத்திற்காக போராட வேண்டிய நாளாக அன்று அனைவரும் வந்து இந்த பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதனை தாழ்மையாக கேட்டுக் கொள்கின்றோம். அதேபோன்று எமக்கு ஆதரவு தெரிவித்து இணைந்து அந்த பேரணியில் பங்கு பெற்றுவதற்கு வடக்கு கிழக்கு மாணவர்களும் மாணவ சமூகங்களாக வந்து இருக்கின்றார்கள் அவர்களும் இந்த பேரணியில் ஒரு பாரிய பங்காளர்களாக நின்று செய்வதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.