மட்டக்களப்பில் அன்னை பூபதிக்கு நினைவேந்தல் மேற்கொள்வதற்கு வருகை தந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இராணுவத்தின் மேலாதிக்கத் தனத்தை இல்லாது செய்து தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கோரி, உலகிற்கு அகிம்சையை போதித்து இந்திய தேசத்தையே அகிம்சையால் நிலைகுலையச் செய்த தியாகத் தாய் அன்னை பூபதியின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகம் எங்கும் பெரும் எழுச்சியுடன் நினைவேந்தப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், அன்னை பூபதியின் நினைவு தினத்தை முன்னிட்டு 16.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் தூபியிலிருந்து வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி ஊர்தி பவனி முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஊர்தி நேற்று மட்டக்களப்பு மாமாங்கத்தை வந்தடைந்து பின்னர் களுவாஞ்சிகுடி வழியாக அம்பாறை நோக்கி பயணமானது. இவ்வாறான நிலையில், இன்று மட்டக்களப்பு அன்னை பூபதி நினைவுத்திடலில் நினைவேந்தல் நடத்துவதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இன்றையதினம் அன்னை பூபதியின் உறவினர்களும், சமூக ஆர்வலர்களும் மட்டக்களப்பிலுள்ள அன்னை பூபதியின் நினைவிடத்தில் பல்வேறு நிகழ்வுகளை மேற்கொள்வதற்காக ஏற்பாடுகளை செய்து , அதற்குரிய நேரத்தையும் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாட்டுக் குழுவினர் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாக நினைவிடத்தில் நினைவேந்தலை மேற்கொள்ள முயற்சித்த போது, அவர்களை, நினைவிடத்தில் இப்போது நினைவேந்தல் மேற்கொள்ள முடியாது எனவும் அதற்காக தாம் நேரத்தை திட்டமிட்டுள்ளதாகவும் அந்த நேரத்திலேயே அனைவரும் நினைவேந்தல்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அவ்வாறு தாம் குறித்த நேரத்திற்கு முன்னதாக நினைவேந்தல் மேற்கொள்ள நினைத்தால் நினைவிடத்திற்கு வெளியில் மேற்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து வடக்கிலிருந்து சென்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், அன்னை பூபதியின் நினைவிடத்திற்கு வெளியில் அஞ்சலி செலுத்திவிட்டு, திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.