மட்டக்களப்பில் விசேட தேவையுடைய பிள்ளைகளை சித்திரவதை செய்தமை தொடர்பில் நேற்றைய தினம் (20.04.2023) வெளியான காணொளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான பராமரிப்பு நிலையத்திற்கு நேரடி விஜயமொன்றை மேற்கொண்டு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விசாரணை இதன்போது இரா.சாணக்கியன் பராமரிப்பு நிலைய பொறுப்பாளர் உட்பட பணியாளர்களிடம் விசாரணை நடத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமன்றி அவர் குறித்த பராமரிப்பு நிலையத்திலுள்ள விசேட தேவையுடைய பிள்ளைகளுடன் சேர்ந்து கலந்துரையாடுவது போன்ற புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் விசேட தேவையுடைய பிள்ளைகளை சித்திரவதை செய்தமை குறித்து வெளியான தகவல் தொடர்பாக கொக்குவில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான பராமரிப்பு நிலையத்தில 22 பெண்கள் 4 ஆண்கள் உட்பட 26 சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அண்மையில் அங்குள்ள இரு சிறுமிகளை கயிற்றால் கட்டி சித்திரவதை செய்த காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து பொலிஸார் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவினர் சென்று விசாரணைகளை மேற்கொண்ட போது இதில் வாய்பேச மூடியாத இரு பிள்ளைகளையே இவ்வாறு கட்டிவைத்து சித்திரவதை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சிறுவர்களுக்கு நன்கொடையாளர்களால் வழங்கப்பட்ட பாவனை பொருட்களை அங்கு கடமையாற்றி வரும் சிலர் திருடிச் சென்றபோது அவர்களை கண்டுபிடித்து எச்சரித்த கோபத்தினால் இவ்வாறு செய்துள்ளதாக பராமரிப்பு நிலைய பொறுப்பாளர் கூறியுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை அங்கு கடமையாற்றும் அனைத்து பணியாளர்களிடமும் வாக்குமூலம் பெற்ற பின்னரே குறித்த சித்திரவதையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கொக்குவில் சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.