தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பண்ணைகளை பார்வையிடுவதற்காக இந்தியாவின் அமுல்(Amul) நிறுவன பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளது.
அவர்கள் நேற்று(08) முதல் பண்ணைகளை ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளதாக தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
அந்த பண்ணைகளின் எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்களை அமுல் நிறுவன பிரதிநிதிகள் குழு நடைமுறைப்படுத்தவுள்ளது.
தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்கு சொந்தமான 31 பண்ணைகள் 28,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் காணப்படுகின்றன.
அவற்றை அமுல் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடுவதற்கு முன்னர், பண்ணைகளின் பெறுமதியை மதிப்பிடத் தொடங்கியுள்ளதாக தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இதுவரை 80 சதவீத நில மதிப்பீடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த பண்ணைகளில் உள்ள விலங்குகளின் பெறுமதியை மதிப்பீடு செய்த கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் அந்த அறிக்கையை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளதாக தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இந்நாட்டில் பால் தொழிலை மேம்படுத்துவதற்காக இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில், தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பண்ணையை இந்திய அமுல் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பண்ணைகளை இந்தியாவிற்கு குத்தகைக்கு விடுவதற்கு எதிராக கடந்த சில மாதங்களாக பால் பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.