சமாதான நீதவான் நியமனத்திற்கான கல்வித் தகைமை மீண்டும் திருத்தப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி சமாதான நீதவான்களுக்கான கல்வித் தகைமை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டிருந்தது.
இதன்படி, சமாதான நீதவானாக நியமனம் பெறுவதற்கான நிபந்தனையாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், கடந்த (13.02.2024) ஆம் திகதி நீதியமைச்சரினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறித்த நிபந்தனையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, சமாதான நீதவான் நியமனத்தைப் பெறுவதற்கு கல்வித் தகைமையாக இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாத வகையில் பரீட்சைக்கு தோற்றி, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 2 திறமை சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த கல்வித் தகுதியை பெற்றிராத ஒருவரை, பிரசித்தமான மதத் தலைவரோ அல்லது சங்கத் தலைவரோ சமாதான நீதவானாக நியமிக்கப்பட தகுதியானவரென பரிந்துரை செய்யும்பட்சத்தில் நீதியமைச்சருக்கு, அவரை சமாதான நீதவானாக நியமிக்க முடியுமென புதிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.