இந்திய, இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக அமுலாக்குவதோடு 13ஆவது திருத்தச்சட்டத்தினையும் நடைமுறைப்படுத்துமாறு எமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி உட்பட நாம் அனைவரும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் இலங்கை அரசாங்கம் அதனை ஏற்றுக்கொண்டாலும் நடைமுறையில் ஆர்வம் காண்பிக்கவில்லை என்பதை உணர்கின்றோம் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னர் முதற்தடவையாக வடக்குக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள தனியார் விடுதியில், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும், புத்திஜீவிகளையும் இராப்போசன விருந்துபசாரத்துடன் சந்தித்து உரையாடினார்.
குறித்த சந்திப்பில், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலாநதன், சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி.சர்வவேஸ்வரன், யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் த.மங்களேஸ்வரன், யாழ்.மாவட்டச் செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உட்பட புத்திஜீவிகளும் பங்கேற்றிருந்தனர்.