டியாகோ கார்சியாவில் சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் குடியேற்றவாசிகள் தாங்கள் பாதுகாப்பாக இல்லை என ஐநாவின் விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
பாலியல் வன்முறைகள், சிறுவர்கள் துன்புறுத்தப்படுதல் குறித்தும் தெரிவித்துள்ள அவர்கள் தற்கொலைகளும், தங்களிற்குதாங்களே காயங்களை ஏற்படுத்திக்கொள்ளுதலும் அங்கு சிக்குண்டுள்ள குடியேற்றவாசிகள் மத்தியில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஐக்கியநாடுகள் அகதிகள் முகவர் அமைப்பின் அதிகாரிகள் அகதிகளின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக டியாகோகார்சியாவிற்கு சென்றுள்ளனர்.
அங்கு காணப்படும் நிலைமை கட்டாயமாக தடுத்துவைத்தல் போன்று காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பரில் ஐக்கியநாடுகளின் அகதிகளிற்கான அமைப்பின் பிரதிநிதிகள் டியோகோ கார்சியாவிற்கு விஜயம் சென்றுள்ளனர்.
டியோகோர் கார்சியாவில் இலங்கையை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் சிக்குண்ட பின்னர் அவர்களின் நிலைமைகளை பார்வையிடுவதற்காக வெளிதரப்பு உள்ளே சென்றது இதுவே முதல்தடவை.
ஐநா அமைப்பின் விஜயத்தின் பின்னர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையை நீதிமன்றம் பிபிசிக்கு வழங்கியுள்ளது.
ஐநாவின் அகதிகளிற்காக அமைப்பின் பிரதிநிதிகள் டியோகார்சியாவில் உள்ள இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை சந்தித்தவேளை அவர்கள் பாலியல் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து தெரிவித்துள்ளதோடு, அதில் சிறுவர்களும் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
டியாகோர் கார்சியாவில் சிக்குண்டுள்ள ஏனைய இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களே இந்த குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அவமானம் சமூகத்தின் பார்வை குறித்த கவலைகள் காரணமாக பாலியல் வன்முறைகள் குறித்து முழுமையான விபரங்கள் வெளியாகவில்லை என குடியேற்றவாசிகள் கருதுகின்றனர்.வலுவான பதில் நடவடிக்கைகளை அதிகாரிகள் மமுன்னெடுக்கப்பபோவதில்லை என கருதுவதாலும் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடுகளை முன்வைக்க தயங்குகின்றனர் என தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் கருதுகின்றனர்.
புகலிடக்கோரிக்கையாளர்களுடன் பேசியவேளை அவர்கள் பாலியல்வன்முறைகள் துன்புறுத்தல்கள் குறித்து முறைப்பாடு செய்ததால் எந்த பயனும் இல்லை என கருதுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ள ஐநா, முறைப்பாடு செய்வதால் பாதுகாப்பு நீதி போன்ற விடயங்களில் முன்னேற்றம் ஏற்படப்போவதில்லை என அவர்கள் கருதுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.
பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரே முகாமில் வசிப்பதாலும் முறைப்பாடுகள் செய்வதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என புகலிடக்கோரிக்கையாளர்கள் கருதுகின்றனர்.
இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் குடும்பங்களிற்கு ஒரு கூடாரம் திருமணமாகாத ஆண்களிற்கு ஒரு கூடாரம் என பிரித்து வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் இதன் பின்னர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஐநா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான போதுமான பொறிமுறையாக இது காணப்படவில்லை என தெரிவித்துள்ள ஐநா ஏனைய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமையை காணமுடியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
உரிய வேலிகள் இல்லாத முகாம்களில் வசிக்கும் குடியேற்றவாசிகள் தாங்கள் எலிக்கடிக்குள்ளாவதாகவும் தெரிவித்துள்ளனர் என ஐநா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடற்கரைக்கு செல்லவிரும்பினால் கூட பாதுகாப்பு தரப்பினருடனேயே செல்லவேண்டியுள்ளது என டியாகோகார்சியாவில் சிக்குண்டுள்ள தமிழ் குடியேற்றவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவே அந்த மக்கள் விரக்தியால் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. மேலும் தற்கொலைகள், தங்களுக்குதாங்களே தீங்கிழைத்தல் போன்றவை இடம்பெறுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது என ஐநா தெரிவித்துள்ளது.
16 சிறுவர்களை உள்ளடக்கிய தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் குழுவினர் தாங்கள் சலிப்படைந்துள்ளதாகவும் மனச்சோர்வுடனும் நம்பிக்கையற்றவர்களாகவும் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர் .
நாங்கள் மறக்கப்பட்டவர்களாகிவிட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர் – எங்கள் வாழ்க்கைய முடித்துக்கொள்வது குறித்து எங்களில் அனேகமானவர்கள் கருதுகின்றோம் என பெண்மணியொருவர் தெரிவித்துள்ளார் என ஐநா தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் பின்னணி
இலங்கை அரசின் ஒடுக்குமுறையிலிருந்து தப்புவதற்காக, சிறிய மீன்பிடி படகில் 94 பேருடன் பிரிட்டன் செல்ல புறப்பட்ட படகு பழுதடைந்ததால் நடுக்கடலில் சிக்குண்ட நிலையில் 2021 ஒக்டோபர் 3 மீட்கப்பட்டு டியாகோ கார்சியாவிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.