30 வருடங்களாக பூட்டப்பட்டிருந்த மட்டக்களப்பு சிங்கள மகாவித்தியாலயம் நேற்று (27) கிழக்கு மாகாண ஆளுநரின் பங்குபற்றுதலுடன் காலை 9.30 மணியளவில் வைபவ ரீதியாக மாணவர்களின் கற்றல் தேவைக்காக ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள மண்முனை வடக்கு கோட்டத்திலுள்ள மும்மொழிப் பாடசாலையான சிங்கள மகாவித்தியாலயம், கடந்த 30 வருடங்களாக பூட்டப்பட்டிருந்தது. கிழக்கு மாகாண ஆளுநர் அநுராத ஜகம்பத், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ. ஜீ திஸாநாயக்க, கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் ஆகியோர்கள் கூட்டாக எடுத்த முயற்சியின் பயனாக இப்பாடசாலை திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாத்தா குலேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா ஜகம்பத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு புனரமைப்பு செய்யப்பட்ட பாடசாலைக்கான நினைவுப்படிகத்தை திரைநீக்கம் செய்துவைத்ததுடன் புதிய மாணவர்களை சேர்வு இடாப்பில் பதிவு செய்து, பாடசாலையில் இணைத்திருந்தார்.