கடந்த சில வாரங்களுக்கு முன்னர் யாழ்பாணத்தில் யுவதி ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதும் அதனை தொடர்ந்து மேலும் சில தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையும் நாம் அறிந்ததே. இந்த கொவிட் தொற்றானது ஒரு சமூக நோய்த்தாக்கம் ஆனபடியால் இன்றைய காலகட்டத்தில் இலகுவில் இது பரவ கூடியது. யாழில் நிலவும் தற்போதைய கொரோனா நிலைமையை அடிப்படையாக கொண்டு, மட்டக்களப்பில் கொரோனாவின் தற்போதைய நிலைமையை அறிந்துகொள்ள மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் திரு. சுகுணன் உடன் Battinaatham ஊடகம் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தது.
அதில் அவர் தெரிவித்ததாவது, கொரோனாவின் தாக்கத்தால் சுமார் 2 1/2 வருடங்கள் உலகமே ஸ்தம்பித்து போயிருந்தது. பின்னர் புது கண்டுபிடிப்பான கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டு அதிலிருந்து மீண்டெழுந்து, காலப்போக்கில் கொரோனாவின் திரிபுகளான அல்பா , பீட்டா, காமா, டெல்டா இறுதியாக ஒமிக்ரோன் என மாறி மாறி பரவத்தொடங்கின. ஆனாலும் கொரோனா தடுப்பூசியானது சகல திரிபுகளுக்கும் தீர்வாக இருந்ததுடன் கொரோனா தாக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும் முடிந்தது.
ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் யாழில் 4, 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தன. இதனை மக்கள் முன்னெச்சரிக்கையாகவும் பார்க்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சுகாதார துறையினர் என்ற வகையில் மக்களுக்கு இதன் உண்மை நிலையை விளக்க வேண்டிய கடமை எமக்குள்ளது.
இலங்கையை பொறுத்தவரையில் தொற்றுநோய்களுக்கெல்லாம் பாதுகாப்புமிக்க நாடாகவே ஒரு தீவாக இது காணப்படுகிறது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கல்விநிலை வளர்ச்சி மிக்கதாகவும், குறிப்பாக சுகாதார துறையினரின் வளர்ச்சி உச்ச நிலையிலும் காணப்படுகிறது. ஏனைய நாடுகளை விட கொரோனா தடுப்பூசி வழங்கல் நிலை இலங்கையில் உயர்வாக காணப்படுகிறது. மக்களிடம் காணப்படும் தொற்றுகின்ற வலையமைப்பு தொடர்புகளை இடையிடையே துண்டிக்க கூடியதாக இருந்தால் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும். அந்த விதத்தில் இலங்கையில் 60% மக்கள் தடுப்பூசியை பெற்றுள்ளதால் எதிர்காலத்தில் கொவிட் -19ன் பாரிய நோய்தாக்கம் ஏற்படுவதிற்குரிய எந்தவொரு சாத்தியமும் இல்லை. அதே சமயம் போடப்பட்ட தடுப்பூசிக்கு எதிராக ஒரு வைரஸ் பிறழ்வு நிலை ஏற்படுமாக இருந்தால் நிச்சயமாக நாம் பயப்பட வேண்டிய தேவைப்பாடு உள்ளது.
சுவாசம் தொடர்பான சுகாதார நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, அடிக்கடி கை கழுவுவது, தும்மல் இருமலின் போது திசு பயன்படுத்துவது என்பனவற்றை மக்கள் கைப்பிடிப்பது எந்தவொரு சுவாசம் சம்மபந்தபட்ட நோய்க்கும் ஒரு பாதுகாப்பாகவே இருக்கும். இதனை மக்கள் கடைபிடிப்பதனை நாம் வரவேற்கின்றோம். இருந்தாலும் கொவிட் -19 கென கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு தடுப்பு முறைகளையும் இதுவரையில் சுகாதார துறையினர் மக்களுக்கு சிபாரிசு செய்யவில்லை என்றார் .
இருப்பினும் மட்டக்களப்பில் டெங்கு நோய் தாக்கம் அதிகளவில் இருப்பதாகவும் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.