2023ஆம் ஆண்டில் எச்.ஐ.வி- எயிட்ஸ் நோயாளிகளில் கணிசமான அதிகரிப்பை இலங்கை சந்தித்துள்ளது, இதன்படி இலங்கையில் 700 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி, இலங்கையில் 694 எயிட்ஸ் தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இது 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13 சதவீத அதிகரிப்பைப் பிரதிபலிப்பதோடு 2022இல் 607 தொற்றாளர்களே இனங்காணப்பட்டனர்.
2023இல் பதிவான தொற்றாளர்களில் 91 ஆண்களும் ஐந்து பெண்களும் 15-24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தனர் மீதமுள்ளவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி 2023இல் பதிவாகியுள்ள எச்.ஐ.வி நோயாளிகளின் ஆண்-பெண் விகிதம் 7.5க்கு 1ஆக உள்ளது.
இதற்கிடையில் 2023 நான்காவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) 2009 முதல் ஒரே காலாண்டில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்களாக 209 பேர் பதிவாகியுள்ளனர்.
அத்துடன் 2023இல் எச்.ஐ.வி-எயிட்ஸ் தொடர்பான 59 இறப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் இலங்கையில் 2023இல் 1,068,309 பேரிடம் எச்.ஐ.வி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
மேலும், இலங்கையில் உத்தியோகபூர்வமாக திருநங்கைகள் மத்தியில் 11 எச்.ஐ.வி தொற்றுகள் பதிவாகியுள்ளன, இந்த நிலையில் 2009ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இலங்கையில் மொத்தம் 4,706 ஆண்களும் 1,472 பெண்களும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சோதனை திறன் விரிவாக்கத்திற்கமைய, பாலியல் கல்வி மற்றும் ஆபத்தான பாலியல் நடத்தைகள் குறித்து மக்களிடையே அறிவின்மை மற்றும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது ஆகியவை இந்த தொற்றுக்களின் அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.